திருச்சி: திருவெறும்பூர் அருகே உள்ள அரசன்குடியில் தில்லை காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நேற்று முன்தினம் (ஏப்.24) நடந்தது. இந்தப் போட்டி, 2006ஆம் ஆண்டுக்கு முன்பு ஆண்டுதோறும் நடந்தது வழக்கம்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படாமல் இருந்துவந்த நிலையில், இந்த ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்டு, திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார் தலைமையில், வருவாய் கோட்டாட்சியர் தவச்செல்வம், திருவெறும்பூர் தாசில்தார் ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் நேற்று (ஏப்.25) காலை 8.15 மணி அளவில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 400 மாடுபிடி வீரர்களும், திருச்சி, தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை உள்ளிட்ட சுற்றுவட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 600 ஜல்லிக்கட்டு காளைகள் கலந்துகொண்டன. முதலில் சங்கிலி ஆண்டவர் கோயில் மாடும், அதன்பிறகு வீசங்க நாடுகோவில் மாடும் அவிழ்த்துவிடப்பட்டது.
இந்தப் போட்டியில் வெற்றிபெறும் காளைகளின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்களுக்கு கிராம கமிட்டி சார்பில் பரிசாக அண்டா வழங்கப்பட்டது. கால்நடை மருத்துவ இணை இயக்குநர் எஸ்தர் ஷீலா தலைமையிலான மருத்துவக் குழுவினர் கால்நடைகளுக்கு மதுபோதை வழங்கப்பட்டுள்ளதா? ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்வதற்கு உரிய தகுதி உள்ளதா? என்பதை சோதனை செய்தனர்.
நவல்பட்டு வட்டார மருத்துவ அலுவலர் பாலாஜி தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு உடல் சோதனை மற்றும் மாடு பாய்ந்ததில் ஏற்படும் காயங்களுக்கான முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டன. திருவெறும்பூர் டிஎஸ்பி சுரேஷ்குமார் தலைமையில் 112 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
காலை 10 மணி நிலவரப்படி 10 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர். இதையடுத்து பிற்பகல் 12.15 மணி அளவில் ஜல்லிக்கட்டு நிறுத்தப்பட்டது. இருப்பினும் ஜல்லிக்கட்டு மீண்டும் பிற்பகல் 2.10-க்கு தொடங்கி 3.25-க்கு முடிவடைந்தது.
இதையும் படிங்க: 'அரசு பள்ளியில் மேசைகளை அடித்து உடைத்த மாணவர்கள் 10 பேர் தற்காலிக நீக்கம்!'