நீர் நாய் என்பது நீரில் வாழ்வதற்கேற்ப தன்னை ஓரளவு தகவமைத்துக் கொண்ட ஒரு வகையான பாலூட்டி இனமாகும். விலங்குகள் வரிசையில் பட்டியலிடப்பட்டாலும், அவை மீன்கள், பறவைகள் போன்றவற்றையே இறையாக கொள்கின்றன. நீர் நாய்களில் மொத்தம் 13 சிற்றினங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
மெலிந்தோ அல்லது சற்றே பருமனுடனோ நீண்ட உடல்வாகினை பெற்றுள்ள நீர் நாய்கள் தண்ணீரில் செல்வதற்கு ஏதுவாக பாதங்களில் ஜவ்வுகளும், வேட்டையாடுவதற்கு ஏற்ப கூர்மையான பற்களையும் கொண்டுள்ளது. 2 முதல் 6 அடி வரையிலான நீர் நாய்கள் 45 கிலோ எடை வரை வளரக்கூடியது.
விளையாட்டுத்தனமும், கூச்ச சுபாவமும் கொண்ட இவை மனிதர்களை பார்த்தாலே ஓடி ஒளிந்து கொள்ளும் தன்மையுடையது. சுமார் 16 ஆண்டுகள் வரை வாழும் நீர் நாய்கள் 60 முதல் 85 நாட்கள் வரை கருவுற்று பிறந்த குட்டிகளை ஆற்றின் கரையோரங்களில் வளை அமைத்து அதில் பாதுகாப்பாக வைத்திருக்கும். பெண் நீர் நாய்கள் 3 ஆண்டுக்கு ஒரு முறை இனப்பெருக்கம் செய்கிறது.
தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய ஆற்று படுகைகள் மற்றும் டெல்டாவிற்கு பாயும் காவிரி ஆற்றிலும், தற்போது அதிக அளவில் நீர் நாய்கள் வசித்துவருகின்றன. அழிந்து வரும் விலங்கினமான நீர் நாய்களை பாதுகாக்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
நல்ல தண்ணீரை மட்டுமே தனது வாழ்விடமாக கொண்ட நீர் நாய்கள் அதிகளவில் மீன்பிடி வலைகளில் சிக்கி உயிரிழந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காவிரியில் முக்கொம்பு ஆற்றுப்படுகையில் அதிக அளவில் நீர் நாய்கள் காணப்படுகின்றன.
தண்ணீர் வற்றிய காலங்களில் மணல் அள்ளுவதும் நீர் நாய் இனம் அழிவதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. ஆற்றில் அதிக அளவில் வளர்ந்து நிற்கும் கோரைப்புற்களுக்கு நடுவில் மறைவிடமான பகுதியில் நீர் நாய்கள் தோண்டி வளை அமைத்து தன்னையும், தன் குட்டிகளையும் பாதுகாக்கிறது. மேலும் பாதுகாப்பு அரணாக அங்கிருந்தவாறே மீன்களை பிடித்து உணவாக்கி கொள்கிறது.
தற்போது திருச்சி மாவட்டத்தில் சுற்றுலா தலமான முக்கொம்பு மற்றும் அதனை சுற்றியுள்ள காவிரி ஆற்றுப்பகுதிகளில் அதிக அளவில் நீர் நாய்கள் வசித்து வருகின்றன. இது அந்த வழியாக செல்லும் பொதுமக்களை கவர்ந்து இழுக்கிறது. மணலில் உருண்டு, புரண்டு விளையாடும் காட்சிகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ரசிக்க தூண்டுகிறது.
உணவு பற்றாக்குறை வேட்டையாடுதல் போன்ற காரணங்களால் நீர்நாய் இனம் வேகமாக அழிந்து வருவதாக ஆய்வுகள் கூறுகிறது. எனவே அதனை தடுக்கும் வகையில் சீர்கெட்டு வரும் நீர்நிலைகளை முதலில் பாதுகாத்தல் முக்கியம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
இதையும் படிங்க: உயர்ந்த கொள்கைகளுக்காக ஸ்டாலின் தொடர்ந்து போராட வேண்டும்; கேரள முதலமைச்சர்