திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பூமாதேவி, ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் பாமக வேட்பாளர் முருகானந்தம் ஆகியோருக்கு வாக்கு சேகரித்து வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.
அப்போது அவர், "ஆளும் கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெற்றால்தான் அரசின் திட்டங்கள் அனைத்தும் உங்களுக்கு முழுமையாக வந்தடையும். 234 தொகுதிக்கும் முதலமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்வதைப்போல்தான் ஒட்டன்சத்திரத்திற்கும் ஒதுக்கீடு செய்து அதன் மூலமாகத்தான் அரசுப்பணிகள் நடைபெறுகின்றன.
இந்தத் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினரோ, நாடாளுமன்ற உறுப்பினரோ சொல்லி நடைபெறுவதில்லை. எனவே இதுபோன்ற பொய் பரப்புரைகளை நம்பாதீர்கள். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது எதிர்க்கட்சியினர் பொய்யான வாக்குறுதிகளைச் சொல்லி அனைத்துக் கடன்களையும் ரத்து செய்கிறோம் எனச் சொல்லியதை நம்பி மக்கள் வாக்களித்தனர்.
இது எல்லாம் பொய் என்று புரிந்துகொண்ட மக்கள் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் ஆதரவளித்து மாபெரும் வெற்றியைத் தந்தார்கள். இதேநிலைதான் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் பிரதிபலிக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றிபெறும். ஊழல் ஆட்சி என எதிர்க்கட்சியினர் பொய் பரப்புரை செய்துவருகின்றனர். எந்தவித ஊழல் இல்லாத ஆட்சியை முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் நடத்திவருகின்றனர்" என்றார்.
அரசின் திட்டங்களை எடுத்துக்கூறியும் வாக்கு சேகரித்தார். வாக்கு சேகரிப்பின்போது அனைத்துக் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.