திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஆடலரசன் எம்.எல்.ஏ. செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் கடந்தாண்டு வீசிய கஜா புயலின் கோர தாண்டவத்தில், திருத்துறைப்பூண்டி தொகுதி சிக்கியது. இதனால் ஆறு மாத காலமாக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பமுடியாமல் மிகப்பெரிய ஒரு பேரிடரை சந்தித்துள்ளனர். மேலும் தொகுதி முழுவதும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்ப்பட்டபோதும் இன்றைக்கு பயிர் காப்பீடு என்பது கிராமம் கிராமமாக விடுபட்டு ஒரு கிராமத்திற்கு ஒரு கிராமம் வித்தியாசமாக கணக்கெடுக்கப்பட்டு ஒரு பாரபட்சமான நிவாரணத்தை இந்த அரசின் புள்ளியல் துறையும் கணக்கு எடுத்திருக்கிறது.
இதனை அரசு உடனடியாக மறுசீரமைப்பு செய்து தேசிய பேரிடராக அறிவிப்பு செய்து பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீடு தொகையை வழங்க வேண்டும். சரியான நேரத்தில் பருவமழை பெய்து விவசாயப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவரும் இந்நிலையில் உரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த உரத்தட்டுப்பாட்டால் விவசாயத் தொழிலாளர்கள் வேலையின்றி இருக்கின்றனர். கஜா புயலால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட முடியாத நிலையில் அதற்கான இழப்பீட்டுத் தொகையும் அரசு வழங்காமல் தாமதப்படுத்தி வருவது டெல்டா விவசாய மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாய தரப்பு மக்களையும் பாதிப்படைய செய்துள்ளது.
இழப்பீட்டுத் தொகையை அரசு உடனடியாக வழங்க மறுக்கும் பட்சத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஒரு மிகப்பெரிய கண்டனத்தை தெரிவிக்க இருக்கிறோம்.
இவ்வாறு ஆடலரசன் எம்.எல்.ஏ. கூறினார்.
இதையும் படிங்க: ஓஎன்ஜிசி-க்கு எதிராக மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு