தை அமாவாசையை முன்னிட்டு, இந்தாண்டு இன்று (ஜனவரி 31) ஸ்ரீரங்கத்தில் உள்ள அம்மா மண்டபம், காவிரி படித்துறையில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
மாதந்தோறும் அமாவாசை வந்தாலும், ஆடி மாதம் வரும் அமாவாசை, புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை, தை மாதம் வரும் தை அமாவாசை ஆகியவை சிறப்பு வாய்ந்த அமாவாசை நாள்களாகக் கருதப்படுகின்றன.
அன்றைய நாளில் முக்கிய ஆறுகள், நீர்நிலைகள் போன்ற பகுதிகளில் திரளும் பொதுமக்கள், புனித நீராடி மறைந்த தங்களது முன்னோர்கள் நினைவாக திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்துவது வழக்கம்.
முன்னோர்களுக்குத் தர்ப்பணம்
இதன்மூலம், தங்களது முன்னோர்களின் ஆசி, தங்களுக்கும், தங்களது சந்ததியினருக்கும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதன்படி, இன்று தை அமாவாசை நாளையொட்டி, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறை, அய்யாளம்மன் படித்துறை, கருட மண்டபம், ஓடத்துறை படித்துறை உள்ளிட்ட இடங்களில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.
அப்போது அவர்கள் புனித நீராடி, பின் காலஞ்சென்ற தங்களது பெற்றோர், முன்னோருக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். இதனையொட்டி, ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் பாரதிதாசன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
காவல் துறை பாதுகாப்பு
மேலும், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் கட்டாய முகக்கவசம் அணிந்து வர வேண்டும் எனக் காவல் துறையின் சார்பிலும் மாநகராட்சியின் சார்பிலும் ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து அறிவுறுத்தினர்.
இரண்டு ஆண்டுகளாகத் தடைவிதிக்கப்பட்ட நிலையில் இந்தாண்டு அனுமதி வழங்கியதால் அதிக கூட்டம் காணப்பட்டது. இதனால், அப்பகுதி பார்ப்பதற்கு திருவிழாக் கோலம் போலக் காட்சியளித்தது.
பூம்புகாரில் குவிந்த மக்கள்
இதேபோலவே, மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் கடலில் காவிரி ஆறு கடலுடன் கலக்கும் சங்கமுக தீர்த்தத்தில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
பூம்புகாரில் காவிரி ஆறு கடலில் கலக்கும் சங்கமுக தீர்த்தத்தில் தை அமாவாசையை முன்னிட்டு மூதாதையருக்குத் தர்ப்பணம் செய்து ஆயிரக்கணக்கானோர் புனித நீராடியது திருவிழாக் கூட்டம்போல் இருந்தது.
இதில் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புனித நீராடி வழிபாடு செய்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா வைரஸ் தொற்று காரணமாக பொதுமக்கள் தை அமாவாசையில் காவேரி சங்கமத்தில்கூட தடைவிதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வரமான நீட்: வறுமையிலும் வென்று மருத்துவராகும் அரசுப்பள்ளி மாணவி!