திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்துள்ள நடுகாட்டுப்பட்டியில் கடந்த 25ஆம் தேதி குழந்தை சுஜித், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சம்பவம் தமிழ்நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், அரசின் பல்வேறு கட்ட முயற்சிகளுக்கு பின் சுஜித்தின் உடல் இறந்த நிலையில் கைப்பற்றப்பட்டது. இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
சுஜித்தை மீட்பதற்கு தமிழ்நாடு அரசு 11 கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாக சமூக வளைதலங்களில் தகவல் வெளியானது. இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "சுஜித் மீட்புப்பணியில் ஈடுபட்ட எல் & டி நிறுவனம் இதுவரை எந்தவித செலவுத் தொகையும் கேட்கவில்லை. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கே.என்.ஆர் நிறுவனமும் எவ்வித தொகையும் வேண்டாம் என மாவட்ட நிா்வாகத்திடம் கூறிவிட்டனா்.
அனைத்து இயந்திரங்களுக்கும் மொத்தம் 5ஆயிரம் லிட்டா் டீசல் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இதர செலவுகள் ரூ. 5 லட்சம் மட்டுமே ஆனது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் சிறுவனை மீட்க 11 கோடி ரூபாய் செலவிட்டதாக வரும் தவறான செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். உண்மைக்கு புறம்பான செய்திகளை அரசுக்கு எதிராக பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்துள்ளார்.
இதையும் படியுங்க:
ஆழ்துளைக் கிணறு விவகாரம்: அதிமுக அறிமுகப்படுத்திய செல்ஃபோன் ஆப்!