தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆனந்த் இன்று திருச்சி சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். இது குறித்து அவர், "நாடு முழுவதும் குழந்தைகள் உரிமை மீறல்கள் தொடர்பான புகார்களை விசாரிக்க 727 மாவட்டங்களில் சிறப்பு அமர்வு வரும் ஜூன் 21 ஆம் தேதி முதல் செயல்படவுள்ளது.
தமிழ்நாட்டில் ராமநாதபுரம், விருதுநகர், கன்னியாகுமரி, மதுரை, புதுக்கோட்டை உள்பட 10 மாவட்டங்களில் இத்தகைய விசாரணை அமர்வு மையம் அமைக்கப்பட இருக்கிறது. இதில் ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர், குழந்தைகள் நல அலுவலர் உள்பட பல துறை அலுவலர்கள் இடம் பெறுவார்கள்.
இந்த அமர்வு கூடுவதற்கு முன்பு பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் விளம்பரங்கள் செய்யப்படும். முக்கிய இடங்களில் தண்டோரா போடப்படும்.
செய்தித்தாள்கள், டிவி சேனல்கள், சமூக வலைதளங்கள் ஆகியவற்றில் குழந்தைகள் உரிமை மீறல் தொடர்பாக வெளியான செய்திகளின் அடிப்படையில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சுயமாக 83 வழக்குகளை பதிவு செய்தது, இதில் 39 வழக்குகளுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மீதமுள்ள வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளது என்றார்.