திருச்சி: நடிகர் ரஜினிகாந்த் அரசியல் வேண்டாம் என ஒதுங்கிய பிறகு, அரசியல் ஆதாயத்திற்காக அவரைப் பயன்படுத்த நினைத்த அவரது ரசிகர்கள் நிலை அந்தோ பரிதாபம்தான் என்று சொல்ல வேண்டும்.
நீங்க எங்க வேணா போங்கங்கற தொனியில் அவரது ரசிகர்களுக்குச் சொல்ல திக்குக்கு ஒருவராகச் சிட்டாய் பறந்துவிட்டனர், இரு பெரும் தலைகளான ஃசபையர் முத்து திமுகவிலும், மற்றொருவரான எஸ்.வி.ஆர். ரவிசங்கர் அதிமுக தரப்பிலும் சரி என்னதான் செய்கிறார்கள்.
ரசிகர்களின் பரிதாபக் கதைகள்
'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பதுபோல திருச்சியை வலம்வந்து அவர்கள் ரசிகர்களிடம் பேசினோம், கொட்டித்தீர்த்து விட்டார்கள்... "எங்க மன்றத்துல நிறைய பேர் தாத்தாவே ஆகிட்டாங்க, கடைசி காலத்துல எங்களை இப்படி கழற்றிவிட்டுட்டாரு. சரி அது பரவாயில்ல நீங்க எங்க போகணுமோ அங்க போங்கனு சொன்னதால அவரவர்கள் அவரவர்களுக்குப் பிடித்த கட்சியில ஐக்கியம் ஆனோம்.
ஆனா பாருங்க தேர்தல் சமயத்துல அவரோட படத்தைப் பயன்படுத்தக் கூடாது, பெயரைப் பயன்படுத்தக் கூடாதுனு அறிவிக்கிறாரு இது என்னங்க நியாயம், ஒவ்வொரு தேர்தலின்பொழுதும் எனது ஆருயிர் நண்பர் அடைக்கலராஜ் வெற்றிபெற வாழ்த்துகிறேன்னு பொக்கேவோட இவரு கைப்பட எழுதிய போஸ்டரை நாங்க எத்தனைமுறை ஒட்டியிருப்போம். இப்போ மட்டும் நாங்க இவரோட படத்தைப் போட்டா இவருக்கு கசக்குதா" என்றார் பெயர் குறிப்பிட விரும்பாத முன்னாள் மன்றத்து உறுப்பினர் ஒருவர்.
பால் ஜெயராமனின் பரிதாபக்கதையைக் கேட்டால் 'உச்'கொட்ட ஆரம்பித்துவிடுவீர்கள், 7ஆவது வார்டு இவருக்குதான்னு சொல்ல அதிமுகவில் ஐக்கியமானாரு. மாநகராட்சித் தேர்தலும் வந்தது களத்துல இறங்குடானு அதிமுக சார்பாக விருப்பமனு அளிச்சார்.
கழற்றிவிட்ட கழகங்கள்
ஆனா பெண்களுக்கு என ஒதுக்கப்பட மனைவி சசிகலாவிற்கு சீட் கேட்டார், தலைமை ஓகே சொல்ல சால்வைகளை ரெடி செய்தார். ஆனால் அதிமுக தலைமை திடீரென அங்கே வழக்கறிஞரான ப்ரியா சிவக்குமாரை களமிறக்கிவிட்டது.
கேபிள் கார்த்தி 3ஆவது வார்டில் நிற்க முனைப்புகாட்ட வார்டு பெண்களுக்கானது என அறிவிப்பு வெளியாக சரி என் மனைவிக்குச் சீட் கொடுங்க எனக் கேட்க, திருச்சி திமுக தலைமையும் தலையை ஆட்டியது, டமால் டுமீல் என வெடிபோட்டு ஆர்ப்பாட்டம்தான்.
சொன்னபடியே மூன்றாவது வார்டில் பூச்செல்வி எனப் பெயரும் வந்தது. தலைமைக்குப் போய் கவுரவம் செய்ய மனைவியோட காத்திருந்தவருக்கு அதிரடியாக சாரிங்க உங்க மனைவி பெயர் தவறுதலாக வந்துவிட்டது அது செல்வி ஃபைபர் செல்வம் மனைவி எனச் சொல்லி திருப்பி அனுப்பி இருக்கிறார்கள்.
ரஜினி சொன்னதாலதான் திமுக 1996இல் ஆட்சியைப் பிடித்ததுனு இனிமே நாங்க மார்தட்ட முடியாது. நாங்க ஊறுகாய்ங்க எனப் புலம்பினார், திருச்சி ஒரு சாம்பிள் இதுபோல தமிழ்நாட்டில் எத்தனையோ ஆதாய விரும்பிகள்!
அரசியல் ஆதாயத்திற்காக ரஜினியைப் பயன்படுத்த நினைக்கும் ரசிகர்களுக்கு இது ஒரு பாடம். மக்களுக்காக களத்தில் நின்றால் அவர்களே தூக்கிவிடுவார்கள். இப்படி ரஜினியைப் பயன்படுத்த நினைப்பது வெட்கக் கேடானது என்று சொல்லுகிறார்கள் ஆதாயம் விரும்பாத அவரது ரசிகர்கள்!
இதையும் படிங்க: ஜெயலலிதா பிறந்தநாளன்று அஜித்தின் 'வலிமை' திரையரங்குகளில்...