2018ஆம் ஆண்டு மதிமுகவினரும், நாம் தமிழர் கட்சியினரும் திருச்சி விமான நிலையத்தில் மோதிக்கொண்டது தொடர்பான வழக்கில் ஆஜராவதற்காக, சீமான் உள்ளிட்ட 14 பேர் திருச்சி நீதிமன்றம் சென்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க சிவசேனாவுக்கு கால அவகாசம் கொடுக்காமல் குடியரசுத் தலைவர் ஆட்சி திட்டமிட்டு அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், பாஜக அனைத்தையும் தனதாக்க நினைப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து சிவாஜி கணேசனோடு ஒப்பிட்டு முதலமைச்சர் பழனிசாமி பேசியிருப்பது ஏற்க முடியாதது என்ற அவர், உலகின் தலைசிறந்த ஆளுமையான சிவாஜி கணேசனை சிறுமைப்படுத்தக் கூடாது என்றார்.
மேலும், வயது முதிர்ச்சி காரணமாகவே நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் என்ற முதலமைச்சரின் கருத்துக்கு உடன்படுவதாக கூறிய சீமான், ரஜினியால் தனது நிலைப்பாட்டில் அரைமணி நேரம் கூட உறுதியாக இருக்க முடியாது என்று விமர்சித்தார்.