திருச்சிராப்பள்ளி: தனியார் மருத்துவமனை காவலாளியின் சடலம் ரயில் பாதையில் இருந்து மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
திருச்சி மணப்பாறை ரயில் நிலையம் அருகில் இன்று காலை அடிபட்ட நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இதனையடுத்து ரயில்வே காவல் துறையினர் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், அவர் மணப்பாறை அடுத்த பன்னாங்கொம்பு பகுதியைச் சேர்ந்த பழனிசாமி (74) என்பதும், அவர் மணப்பாறையிலுள்ள தனியார் மருத்துவமனையில் இரவு காவலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் குடும்பத்தினருக்கு தகவலளிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இரவு காவலாளியாக வேலை பார்த்து வந்தவர் எதற்காக ரயில் பாதைக்குச் சென்றார்? இது கொலையா? அல்லது தற்கொலையா? என பல்வேறு கோணங்களில் ரயில்வே காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.