திருச்சி மேற்குப் பகுதிக்குள்பட்ட தில்லைநகர், அரசு மருத்துவமனை ஆகிய இரண்டு காவல் நிலையங்களில் காவலர்களுக்கு 2,000 ரூபாய் பணம் கொடுத்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. திருச்சி மேற்கு திமுக வேட்பாளர் கே.என். நேரு அஞ்சல் வாக்கில் தனக்கு வாக்களிப்பதற்காக இந்தப் பணத்தை 34 உறைகளில் தலா 2,000 ரூபாயை காவலர்களுக்கு விநியோகம் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை கே.என். நேரு மறுத்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.
இது தொடர்பாக திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் லோகநாதன் மேற்கொண்ட விசாரணையில் திமுக வழக்கறிஞர் பாரதி மணிவண்ணன் கைதுசெய்யப்பட்டார். ஒரு காவல் ஆய்வாளர் உள்பட ஆறு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்திவரும் சூழ்நிலையில் மாநகர காவல் துறை ஆணையர் லோகநாதன் அதிரடியாகத் தேர்தல் தொடர்பில்லாத பணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் திருச்சி மாநகர காவல் சரக உதவி ஆணையர் தமிழ்மாறன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் காவல் துறையினருக்கு கவர் கொடுத்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து திருச்சி மாநகர காவல் துறைக்கு புதிய ஆணையராக அருண் நியமனம்செய்யப்பட்டுள்ளார்.
திருச்சியை தலைமையிடமாகக் கொண்ட மத்திய மண்டல ஐஜி ஜெயராமன் மாற்றப்பட்டு, புதிய ஐஜியாக தீபக் தாமோர் நியமனம்செய்யப்பட்டுள்ளார்.
தேர்தல் சமயத்தில் திருச்சி மாவட்ட மற்றும் மாநகரத் தலைமைப் பொறுப்புகளில் இருந்த அலுவலர்கள் மாற்றம் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.