திருச்சி: மணப்பாறை அருகே கே.உடையாபட்டியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி மகன் சக்திவேல்(43). இவர் குளித்தலை சாலையில் உள்ள நூற்பாலையில், சுமார் 10 ஆண்டுகளாக தோட்டத்தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை(டிச.01) மணப்பாறை ரவுண்டானா பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பின்னால் வந்த மினி பஸ் மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
அதன் பின் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
அவருக்கு உரிய இழப்பீடு வழங்கிடக்கோரி, அவரது உறவினர்கள் இன்று(டிச.02) ஆலையை முற்றுகையிட்டும், சாலையின் குறுக்கே அமர்ந்தும் மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மணப்பாறை காவல் துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களை அழைத்து, ஆலை நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சுமார் அரை மணி நேரம் நடந்த பேச்சு வார்த்தையில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குவதாக ஆலை நிர்வாகம் கூறியதையடுத்து, உறவினர்கள் கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியலால் மணப்பாறை குளித்தலை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும், விபத்து ஏற்படுத்திய மினி பஸ் ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 'நாங்கள் இருவரும் சேர்ந்தால் வெற்றியே...'; யாரை சொல்கிறார் ஜி.வி.பிரகாஷ்?