திருச்சி: மணப்பாறை அடுத்த மலைத்தாதம்பட்டியில் டொம்பச்சி ஆற்றுப்பகுதி உள்ளது. இந்த ஆற்றுப் பகுதியை ஒட்டி தோட்டம் வைத்துள்ள சிலரை கையில் வைத்துக்கொண்டு, இரவு நேரங்களில் மணல் திருட்டில் ஈடுபடும் நபர்களின் வாகனங்களை வருவாய்த் துறையினரும், காவல் துறையினரும் அவ்வப்போது பறிமுதல் செய்வது வழக்கம்.
இந்நிலையில் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள டொம்பச்சி ஆற்றுப் பகுதியை ஒட்டி தனிநபருக்குச் சொந்தமான பஞ்சாலை ஒன்று பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
சினிமாவை விஞ்சும் பலே திருட்டு
அந்த நபர் கடந்த 10 நாள்களாக, தனக்குச் சொந்தமான இடத்தை ஒட்டிய ஆற்றுப் பகுதியின் கரைகளை சரிசெய்வதுபோல், பாவனை செய்து ஆற்றில் இருந்து, சுமார் 50-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரி கொள்ளளவு கொண்ட மணல்களை சுருட்டி தனக்குச் சொந்தமான நிலத்தில் கொட்டிவைத்து, பின்னர் இரவு நேரங்களில் விற்பனை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து கிராம நிர்வாக அலுவலரிடமும், வருவாய் ஆய்வாளரிடமும் அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர்.
அதனடிப்படையில், சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட கருப்பூர் பகுதி கிராம நிர்வாக அலுவலர், வேங்கைகுறிச்சி வருவாய் ஆய்வாளர், மணப்பாறை வட்டாட்சியர் ஆற்றுப்பகுதியை ஆக்கிரமித்து மணல் கொள்ளையில் ஈடுபட்ட தனி நபரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
மணல் திருட்டு
அப்போது அந்த தனி நபர் ஏற்கெனவே வருவாய்த்துறையிடமும் பொதுப்பணித்துறை அனுமதியுடனும் பணி மேற்கொண்டதாக கூறியிருந்த நிலையில், மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பொதுப்பணித்துறையிடம் அனுமதி பெறாமல் இருப்பது அரசு அலுவலர்களுக்குத் தெரியவந்தது.
பின், அந்த தனி நபரிடம் வட்டாட்சியர் விசாரணை நடத்தி, அறிவுரை கூறி சென்றார்.
இதேபோல் கடந்த மாதம் பண்ணப்பட்டி வருவாய் கிராமத்தில் கனிம வகைகளில் ஒன்றான வெங்கிச்சான் கற்களை பகல் நேரங்களிலேயே கொள்ளையடித்தவர்களை கண்டும் காணாதது போல் வட்டாட்சியர் வலம் வந்த நிலையில்,
தற்போது ஆற்று மணலை அனுமதியின்றி அள்ளி பதுக்கி வைத்துள்ள தனி நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அறிவுரை கூறிசென்ற சம்பவம் வருவாய்த்துறையினர் விலை போயிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பாலாற்றில் மணல் கடத்தல்: 3 பேர் கைது