மணப்பாறை அடுத்த நடுப்பட்டியில் கடந்த புதன்கிழமை (மே 22) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அப்பகுதியில் குடிநீர் போதிய அளவில் கிடைக்காமல் பொதுமக்கள் அவதியுற்று வருவதாகவும், ஆழ்துளைக் கிணறுகளிலும் தண்ணீர் வரத்து போதிய அளவில் கிடைப்பதில்லை என்றும் கூறப்பட்டது. மேலும், குடிநீர் நீரேற்று நிலையத்தில் நடைபெறும் முறைகேடுகளால் போதிய நீரை ஏற்றப்படுவது கிடையாது, குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படுவதில்லை, ஊராட்சி செயலர் தனிநபர்களுக்கு முறையற்ற இணைப்புகள் அளித்து வருகிறார் என புகார்களை முன்வைத்து ஊராட்சி மன்றத்தில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.
அதன் விளைவாக நடுப்பட்டி பகுதியில் ஊராட்சி ஒன்றிய அதிகாரி தனிநபர் குடிநீர் குழாய் இணைப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், தனி குடியிருப்பு குடிநீர் குழாய்களை ரத்து செய்துவிட்டு பொது குழாய் அமைக்கவும் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இது குடிநீருக்கான வைப்புத் தொகையும், வரியும் செலுத்தி மக்கள் பொதுக்குழாய்க்கு சென்று குடிநீர் எடுக்கும் நிலை உருவாகும்.
எனவே, தனிநபர் வீட்டு குடிநீர் குழாய் இணைப்புகளை ரத்து செய்யும் நடவடிக்கையினை ஊராட்சி நிர்வாகம் கைவிடக்கோரி, அப்பகுதியினைச் சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதோடு, ஊராட்சி ஒன்றிய ஆணையருக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் கையொப்பமிட்ட மனு ஒன்றும் அளித்துள்ளனர்.