திருச்சி மாவட்ட நாணவியல் கழகம், அரிகண்ட் காயின் கேலரி நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் பழங்கால நாணயங்களின் கண்காட்சி திருச்சி தில்லை நகரில் இன்று தொடங்கியது. இதில் மொத்தம் 30 ஸ்டால்களில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாணயங்கள், பணத்தாள்கள், தபால்தலைகள் ஆகியவை காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.
இந்த கண்காட்சியை அரிகண்ட் கேலரி உரிமையாளர் அபேகுமார் தொடங்கி வைத்தார். இந்தக் கண்காட்சியில் 650 நாணயங்களை கொண்ட 2019ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பையின் மாதிரி வடிவம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை பள்ளி மாணவ மாணவிகள் பலரும் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். இக்கண்காட்சி இன்று முதல் வரும் 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து நாணயவியல் கழக செயலாளர் பத்ரிநாராயணன் கூறுகையில், "நமது பழங்கால அரிய வகைப் பொருட்களை மாணவர்களிடம் கொண்டு செல்லும் வகையிலும், நாணயங்களை போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்று மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சி நடத்தப்படுகிறது" என்றார்.