திருச்சி: தேசிய தூய்மைப் பணியாளர்கள் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் தலைமையில் திருச்சி மாவட்டத்தில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுடனான கலந்தாய்வுக்கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (01.03.22) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, திருச்சி மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட அலுவலர்களும், தூய்மைப் பணியாளர்களும் கலந்துகொண்டனர். அப்போது, தூய்மைப் பணியாளர்கள் தங்களுடைய குறைகளையும், கோரிக்கைகளையும் ஆணையத்தின் தலைவர் முன் வைத்தனர்.
ஊதிய உயர்வு கோரிக்கை
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கடேசன், 'இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ளேன். இன்று அரியலூர் மற்றும் திருச்சி மாவட்டத்தில் தூய்மைப் பணியாளர்களுடன் கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்களின் கோரிக்கையைக் கேட்டறிந்தேன். அதில் பெரும்பாலான தூய்மைப் பணியாளர்கள் தங்களுக்கு வழங்கும் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளோம். அவர் பரிசீலிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மருத்துவக் காப்பீடு வசதி
திருச்சி மாவட்டம் சார்பாக தூய்மைப் பணியாளர்களுக்கு மருத்துவக்காப்பீடு செய்து தரப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வேறு எந்த மாவட்டத்திலும் இதுபோல், ஆட்சியர் அறிவிக்கவில்லை. திருச்சி மாவட்ட ஆட்சியரின் இந்த அறிவிப்புக்குப் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தூய்மைப் பணியாளர்களுக்குத் தேசிய அளவில் ஆணையம் செயல்படுகிறது. தேசிய அளவில் செயல்படுவதால் வேலைப் பளு அதிகம் உள்ளது. அனைத்து மாவட்டங்களையும் கவனிக்க முடியவில்லை. எனவே, மாநில அளவில் இது போன்ற ஆணையம் தேவை.
தனி ஆணையம் வேண்டும்
9 மாநிலங்களில் மாநில அளவில் தூய்மைப் பணியாளர்கள் ஆணையம் செயல்படுகிறது. அதே போல தமிழ்நாட்டிலும் தூய்மைப் பணியாளர்கள் ஆணையம் அமைக்க வேண்டும். இதைத் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கையாக வைக்கிறேன்.
தூய்மைப்பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தும் முறையைத் தமிழ்நாடு அரசு ஒழிக்க வேண்டும். இந்த முறையால் ஒப்பந்தத்தொழிலாளர்கள் கடுமையாகப்பாதிக்கப்படுகிறார்கள். ஒப்பந்த முறை தேவையா என்பதை ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும்.
மலம் அள்ள வற்புறுத்தினால் தண்டனை
தூய்மைப் பணியாளர்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அவர்களுக்கு மருத்துவ முகாம் அமைக்க வேண்டும் என அனைத்து மாவட்ட நிர்வாகத்தினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மலக்கழிவுகளை எடுக்க மனிதர்களைப் பயன்படுத்தக்கூடாது என சட்டம் உள்ளது.
அதையும் மீறி யாரும் மனிதர்களை மலம் அள்ளப்பயன்படுத்தினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து யார் புகார் அளித்தாலும் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஓராண்டில் தமிழ்நாட்டிலிருந்து மனிதக்கழிவுகளை மனிதர்களே அள்ளுவது தொடர்பாக எந்த புகாரும் ஆணையத்திற்கு வரவில்லை. போதுமான விழிப்புணர்வு இல்லாதது தான் அதற்குக் காரணம். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது' என்றார்.
இதையும் படிங்க: நிலையூர் கண்மாயில் சட்டவிரோத தண்ணீர் திறப்பு குறித்து ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு