இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் திருச்சி தனியார் ஹோட்டலில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
"அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்குப் பருவமழை நமக்கு கிடைக்கும். இந்தாண்டு தென்மேற்கு பருவமழையும் நமக்கு கிடைத்துள்ளது. அதோடு அண்டை மாநிலங்களில் பெய்த கூடுதல் மழை காரணமாக நமக்கு கூடுதல் நீர் கிடைத்துள்ளது.
பருவமழை காரணமாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும். இது வலுவிழக்கும். சமயங்களில் புயலாக மாறிவிடும்.
தேசிய பேரிடர் மீட்பு குழுபோல் மாநில பேரிடர் மீட்பு குழு தயாராக உள்ளது. இந்த குழுக்களுக்கு நவீன உபகரணங்கள் வாங்குவதற்காக 38 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் கடலோர மாவட்டங்கள் ஆகும். இந்த மாவட்டங்களில் 121 பல்நோக்கு தங்குமிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர இதர மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள், சமுதாயக் கூடங்கள், திருமண மண்டபங்கள் அடையாளம் காணப்பட்டு அவசர காலத்தில் மக்கள் தங்க தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. போதுமான உணவு மற்றும் மருந்து வகைகளும் இருப்பு வைக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது" எனக் கூறினார்.
இதையும் பார்க்கவும் : இடி மின்னலுடன் கனமழை - வீட்டிற்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதி