மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் 33ஆவது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அதிமுகவினர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவருகின்றனர். மேலும் அன்னதானம், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.
அதேபோல் திருச்சி கன்டோன்மென்ட் ஐயப்பன் கோயில் ரவுண்டானாவில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஆவின் தலைவர் கார்த்திகேயன், ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் சோமரசம்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திருச்சி அதிமுக புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் நடந்த இந்த மாலை அணிவிப்பு நிகழ்ச்சியை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் கு.ப. கிருஷ்ணன், கே.கே. பாலசுப்ரமணியன், மணிகண்டம் வடக்கு ஒன்றியச் செயலாளர் ஜெயக்குமார், நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதுபோல் மாவட்டம் முழுவதும் அதிமுகவினர் எம்ஜிஆர் நினைவுநாளையொட்டி மரியாதை செலுத்தினர்.
இதையும் படிங்க: எம்ஜிஆர் பிம்பச் சிறை: கானல்நீரை துரத்தும் அரசியல்வாதிகள்