திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் மணப்பறையில் நகராட்சி அலுவலகத்திலும், வட்டாட்சியர் அலுவலகத்திலும் நிரந்தர ஆதார் சேவை மையங்கள் செயல்பட்டுவந்தன. அதேபோல் மருங்காபுரி வட்டாட்சியர் அலுவலகத்திலும் ஒரு சேவை மையம் செயல்பட்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மணப்பாறை நகராட்சி அலுவலகம், மருங்காபுரி வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இரு மையங்களும் திடீரென மூடப்பட்டது.
இதனால் ஆதார் பதிவு, திருத்தம், புதிய சேர்க்கை போன்ற சேவைகளை பெற முடியாமல் பொதுமக்கள் கடும் அவதியுற்றனர். இந்த சூழலில் அருகிலுள்ள புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, இலுப்பூர் ஆகிய தாலுகாக்களில் உள்ள சேவை மையங்களும் செயல்படாமல் போனது.
மணப்பாறை வட்டாச்சியர் அலுவலகத்தில் அலைமோதிய பொதுமக்கள் கூட்டம் இதனால் மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் மட்டும் செயல்பட்டுவரும் ஆதார் சேவை மையத்தை நோக்கி பொதுமக்கள் படையெடுக்கத் தொடங்கினர். எனவே, அங்கு கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக பொதுமக்களுக்கு டோக்கன் முறையை செயல்படுத்திவருகின்றனர். இதனால் நாள் ஒன்றுக்கு 40பேர் வீதம் ஒரு மாதத்திற்குரிய அனைத்து டோக்கன்களும், மாதத்தின் முதல் இரண்டு, மூன்று நாட்களில் கொடுத்துவிடுவதாக கூறப்படுகிறது.
டோக்கன் பெறுவதற்காக நேற்று அதிகாலை முதல் மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். இதையடுத்து கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் அங்கு வரவழைக்கப்பட்டனர்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் கூறுகையில், மாதம் முழுமைக்கும் டோக்கன் அளிக்கும் முறையை மாற்ற இருப்பதாகவும், செயல்பாட்டை நிறுத்தியுள்ள மையங்கள் மீண்டும் செயல்படவும், கூடுதல் மையங்கள் அமைக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.