கமல் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணியில், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி இடம்பெற்றுள்ளது. இந்தக் கட்சிக்கு திருச்சி மாவட்டம் லால்குடி சட்டப்பேரவைத் தொகுதி ஒதுக்கீடுசெய்யப்பட்டது.
சமத்துவ மக்கள் கட்சி சார்பில் முரளி கிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் லால்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுவையும் தாக்கல்செய்தார். அவரது வேட்புமனு ஏற்கப்பட்டது.
இந்நிலையில் திடீரென அவர் இன்று (மார்ச் 22) திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு முன்னிலையில் திமுகவில் இணைந்தார். திருச்சி, தில்லைநகர் சாஸ்திரி சாலையில் உள்ள முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் நடந்த, இந்த இணைப்பு நிகழ்ச்சியின்போது மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, லால்குடி சட்டப்பேரவை வேட்பாளர் சௌந்தரபாண்டியன், மாநகரச் செயலாளர் அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, ஒன்றிய செயலாளர் கதிர்வேல் ஆகியோர் உடன் இருந்தனர்.
மேலும், திமுகவில் இணைந்த சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் முரளிகிருஷ்ணன், தனது வேட்புமனுவைத் திரும்பப் பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.