இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "இந்தியாவின் தலை சிறந்த ஆராய்ச்சி படிப்பு மாணவர்களை ஊக்குவிப்பதோடு, அவர்களது கண்டுபிடிப்புகளை மேம்படுத்தும் விதமாக கடந்த 2018&19ஆம் ஆண்டின் மத்திய பட்ஜெட்டில் பிரதமரின் ஆராய்ச்சி கூட்டுறவு திட்டம் அறிவிக்கப்பட்டு தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டம் ஐஐடி, ஐஐஎஸ்இஆர், ஐஐஎஸ்சி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் மட்டுமே செயல்பட்டுவந்தது. ஆனால் கடந்த ஆண்டு தேசிய கல்லூரிகளின் தர வரிசை பட்டியலில் முதல் 25 இடங்களில் உள்ள கல்லூரிகளுக்கு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அந்தவகையில் திருச்சி என்ஐடி கல்லூரிக்கும் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்தத் திட்டத்தில் ஆண்டுதோறும் 20 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இவர்களுக்கு முதல் 2 ஆண்டுகளுக்கு 70 ஆயிரம் ரூபாயும், 3ஆம் ஆண்டு ரூபாய் 75 ஆயிரமும், அடுத்த இரு ஆண்டுகளுக்கு 80 ஆயிரம் ரூபாயும் மாதாந்திர உதவித் தொகையாக வழங்கப்படும். இது மட்டுமின்றி ஆண்டுதோறும் 2 லட்ச ரூபாய் பணம், இதர எதிர்பாராத செலவுகளுக்கு வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயன் பெறுபவர்கள் கடுமையான தேர்ந்தெடுப்பு முறைகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவர்கள் தேசத்தின் தேவையை பூர்த்தி செய்யும் வண்ணம் அமைந்துள்ள ஆராய்ச்சி தலைப்புகளில் பணிபுரிவார்கள். மேலும் ஆண்டுதோறும் தேசிய ஒருங்கிணைப்பு குழுவின் மூலம் இவர்களது பணிகள் ஆய்வு செய்யப்பட்டு அதன் பின்னரே உதவித்தொகை வழங்கப்படும். இது என்ஐடி கல்லூரிக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம்" என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சிறப்பு விமானம் மூலம் துபாயிலிருந்து சென்னை வந்த 359 பேர்!