திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த பிச்சம்பட்டியைச் சேர்ந்தவர்கள் தர்மர் - ஜான்சிராணி தம்பதி. இந்நிலையில், நேற்றிரவு ஜான்சிராணி தனது வீட்டின் பின்புறம் உள்ள கொடிக் கயிற்றில் துணிகளை உலரவைக்க சென்றிருக்கிறார். அப்போது கொடிக் கயிற்றில் வீட்டிற்கு வரும் மின் இணைப்பு வயர் அறுந்து கிடந்ததைக் கவனிக்காமல் துணிகளைக் உலரவைக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி துடிதுடித்துள்ளார்.
அலறல் சத்தம் கேட்டு தர்மர் மனைவியை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது இருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் தாக்கி கணவன், மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.