திருச்சி விமான நிலையத்தில் இருந்து 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று (டிச. 24) திருச்சி வந்தது. இதில் தங்கம் கடத்தப்படுவதாக மத்திய வான் நுண்ணறிவு பிரிவுக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து அலுவலக குழுவினர் திருச்சி விமான நிலையத்தில் முகாமிட்டு, அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்கள் கொண்டுவந்த உடமைகளையும் முழுமையாக சோதனையிட்டனர். ஆனால் தங்கம் சிக்கவில்லை.
விமான நிறுவன ஊழியர் தங்கம் கடத்தல்
இந்நிலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியர் மூலம் 2.5 கிலோ தங்கம் கடத்தப்படுவதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அலுவலர்கள் விமான நிலையத்தின் வெளிப்புறத்தில் உள்ள கார் பார்க்கிங், சரக்கு விமான போக்குவரத்து பகுதி, விஐபிகள் நுழைவுவாயில் ஆகிய பகுதிகளில் தீவிரமாக கண்காணித்தனர்.
இதில் ஏர்-இந்தியா ஊழியர் கோபிநாத் என்பவர் சரக்குப் பிரிவு வழியாக விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தார். பின்னர் அங்கு காத்திருந்த கடத்தல்காரர்கள் மூன்று பேரிடம் தங்கத்தை ஒப்படைத்த போது, கையும் களவுமாக அலுவலர்கள் பிடித்தனர்.
இதைத்தொடர்ந்து, அந்த ஊழியரிடம் விசாரணை நடத்தியதில் தங்கம் கடத்திவந்த பயணிக்கும் இவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. தங்கம் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த கோபிநாத் கைது செய்யப்பட்டு, திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: ஆறு ஐஏஎஸ் அலுவலர்கள் இடமாற்றம்!