திருச்சி: துறையூர் பாலக்கரை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் கூடுதல் பணம் கொடுக்காததால் வாடிக்கையாளர் கேட்கும் மதுபான வகையை கொடுக்க மறுக்கும் டாஸ்மாக் ஊழியரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. துறையூரில் உள்ள மதுபான கடைகளில் குடிமகன்கள் கடை விற்பனையாளர்கள் சொல்லும் விலை கொடுத்து வாங்கி செல்கின்றனர்.
இதில் ஒரு சில விவரமான குடிமகன்கள் பாட்டிலுக்கு ஐந்து ரூபாய் மற்றும் 10 ரூபாய் அதிகமாக கேட்பது ஏன் எனக் கேட்டு தகராறில் ஈடுபடும் சம்பவம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் துறையூர் பாலக்கரை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக இருப்பவர் செந்தில் இவர் வாடிக்கையாளர் ஒருவர் குறிப்பிட்ட சரக்கை கேட்கும்போது அவர் தர மறுக்கிறார்.
வாடிக்கையாளர் குறிப்பிட்ட சரக்கை கை காட்டி அதோ இருக்கிறது ஏன் மறுக்கிறீர்கள்? 5 ரூபாய் கூடுதலாக ஏன் கேட்கிறீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. மேலும் குறிப்பிட்ட விற்பனையாளர் தர மறுத்த நிலையில் அதே கடையில் பணிபுரியும் மற்றொரு விற்பனையாளர் சலித்துக் கொண்டு அவர் கேட்ட குறிப்பிட்ட சரக்கை எடுத்து தரும் வீடியோவும் அதில் பதிவாகியுள்ளது.
டாஸ்மார்க் கடையில் ஊழியர் ஒருவர் ஐந்து ரூபாய் அதிகமாக கேட்கும் வீடியோ துறையூர் பகுதியில் பரபரப்பாக வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: அதிமுகவின் ஒற்றைத்தலைமை யாருக்கு? - ஈபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனியாக ஆலோசனை!