திருச்சி: திருச்சி துறையூர் பாலக்கரையில் நகர, ஒன்றிய தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 1000 பேருக்கு பொங்கல் பொருட்கள் அடங்கிய தொகுப்பு பை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமை தாங்கினார், நகர செயலாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் செல்லதுரை வரவேற்றார்.
கொட்டும் மழையில் கூடியிருந்த மக்களிடையே, தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பேசுகையில், ”தேமுதிக மிகவும் கட்டுப்பாட்டுடன் உள்ள கட்சி. விஜயகாந்த் உடல்நிலை நன்கு தேறிவருகிறது என்றால் அதற்கு தொண்டர்களின் பிரார்த்தனை மட்டுமே காரணம். எந்த கட்சிக்கும் தேமுதிக சளைத்த கட்சியல்ல.
அதிமுக, திமுக என்ற இரு பெரும் கட்சிகள் இருந்தபோதே, தேமுதிக எதிர்க்கட்சி அந்தஸ்தை பிடித்தது. தேமுதிகவிலிருந்து ஒரு சிலர் வெளியேறுவதால் , குப்பைகள் அகற்றப்பட்டு கட்சி இப்போது சுத்தமாகி உள்ளது. ஸ்டாலின் சென்னையை சுத்தம் செய்தாரோ இல்லையோ, எங்கள் கட்சியை தற்போது சுத்தம் செய்து வருகிறார்.
பொங்கல் என்றாலே சூரிய பகவானை வழிபடுவதுதான் வழக்கம். தற்போது மழை பெய்வதால் சூரியனைப் பார்க்க முடியவில்லை. இதைப் பார்க்கும்போது 2021 தேர்தலில் சூரியனுக்கு வழியே விடாமல் செய்வதற்குதான் மழை பெய்து கொண்டிருக்கிறதோ எனத் தோன்றுகிறது.
தமிழ், தமிழ் என்று சொல்லி இந்திக்காரரான பிரசாந்த் கிஷோரை அரசியல் ஆலோசகராக வைத்துக் கொண்டு திமுக அரசியல் நடத்தி, தமிழ்நாட்டு மக்களை முட்டாளாக்குகிறது. 2021-ல் தேமுதிக கூட்டணி வைத்தாலும், எந்த முடிவு எடுத்தாலும் அனைவரும் ஒன்றுபட்டு முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்" என்றார்.
பின்னர், பச்சரிசி, வெல்லம், பாசிப்பருப்பு, நெய், முந்திரி, திராட்சை, முழு கரும்பு உள்ளடக்கிய சுமார் ரூ.500 மதிப்புள்ள பொங்கல் தொகுப்புப் பையை பொது மக்களுக்கு வழங்கினார்.
முன்னதாக விஜய பிரபாகரனுக்கு திருச்சி கொள்ளிடம் நம்பர் 1 டோல்கேட் பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு தேமுதிக கட்சி கொடியை விஜய பிரபாகரன் ஏற்றிவைத்தார்.
இதையும் படிங்க: ஜெயலலிதா நினைவிடத்தை திறக்க மோடிக்கு அழைப்பு