தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம் சார்பில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது. திருச்சி காந்தி மார்க்கெட் பழைய பால்பண்ணை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இந்த பயிற்சி முகாமின் தொடக்க விழாவில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கலந்துகொண்டார். மேலும் மாவட்ட ஆட்சியர் சிவராசு உள்ளிட்ட அலுவலர்களும் கலந்துகொண்டனர். விழாவில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு மருந்து தெளிக்கும் கைத் தெளிப்பான் கருவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், “தமிழ்நாடு அரசு நாளை சிறந்த பட்ஜெட் வழங்கும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பை ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். எந்தத் திட்டமாக இருந்தாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதையே ஸ்டாலின் தனது அன்றாட பணியாகச் செய்துவருகிறார்.
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள வேளாண் மண்டல அறிவிப்பைப் பலரும் பாராட்டும் நிலையில், ஸ்டாலின் மட்டும் அதை குறை கூறுகிறார். இந்த அறிவிப்பு மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.
மேலும், “விவசாயிகளின் நண்பனாக தமிழ்நாடு அரசு செயல்பட்டுவருகிறது. இதனால் பலரும் அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். விவசாயிகளின் நண்பனாக, விவசாயியின் தலைமையில் ஒரு ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெறுகிறது” என்று கூறினார்.
இறுதியாக அவர், “டாஸ்மாக் மதுபான கடைகளில் அனுமதியில்லாத நேரங்களில் மதுபானம் விற்பனை செய்யப்படுவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த வகையில் ஆக்கிரமிப்புகளும் உரிய முறையில் அகற்றப்படும். ஆக்கிரமிப்பாளர்களை அழைத்து பேசி அவர்களுக்கு மாற்று இடம் கொடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி திருச்சியை பொழிவான நகரமாக உருவாக்குவோம்” என்றார்.
இதையும் பாருங்க: கண்கவரும் அழகு... ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!