திருச்சி: மணப்பாறையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முத்தரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக முத்தரசன் கோவில்பட்டி சாலையில் உள்ள தேர்தல் பணி காரியாலயத்தைத் திறந்துவைத்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அவர், "அதிமுக, பாஜக தலைவர்கள் தேர்தல் கால வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை எனப் பரப்புரை செய்துவருகின்றனர். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவோம் என வாக்குறுதியைக் கொடுத்தோம், அதை இப்போது நிறைவேற்றியுள்ளோம்.
இந்தத் தேர்தலில் எங்களது அணி நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தலைப் போல் வெற்றிபெறுவோம். இது லட்சியத்திற்கான அணி. நீட் தேர்வுக்கு விலக்குப் பெறுவதில் அதிமுக இரட்டை வேடம் போடுகிறது.
இந்த நகர்ப்புறத் தேர்தலில் நாம் மகத்தான வெற்றிபெற வேண்டும், எதிர்த்துப் போட்டியிடுபவர்கள் காப்புத்தொகை (டெபாசிட்) இழக்க வேண்டும்” எனப் பேசினார்.
இதையும் படிங்க: மோடி ஆட்சியில் ரூ.5.35 லட்சம் கோடி மோசடி - ராகுல் குற்றச்சாட்டு