திருச்சி: உலகம் முழுவதும் கரோனா தொற்று சுனாமிபோல பரவிவரும் வேளையில் தமிழ்நாடு அரசு ஜனவரி 31ஆம் தேதிவரை இரவு நேரக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதேபோல ஜனவரி 14ஆம் தேதிமுதல் 18ஆம் தேதிவரை கோயில்களில் தரிசனத்துக்கும் தடைவிதித்துள்ளது.
இந்நிலையில் சபரிமலைக்கு மாலை அணிந்து உள்ள பக்தர்கள் அரசின் ஆணையைப் பார்த்து அரண்டுபோயுள்ளனர். பொதுவாக சபரிமலைக் கோயிலுக்கு மாதாமாதம் செல்பவர்கள் உண்டு. தமிழ் மாதத்தின் முதல் நாள் அங்கே நடைதிறக்கப்படுவதும் மூன்று நாள்கள் திறந்திருக்கும் சன்னிதானத்தில் கூட்டம் அவ்வளவாக இருக்காது என்பதாலும் சிலர் இப்படிச் செல்வது உண்டு.
ஆனால் 48 நாள்கள் கடுமையான விரதம் இருந்து பெரியபாதை வழியாகச் செல்வதற்கு மார்கழி மாதமும் தை மாதமும் மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. அந்த வகையில் பொங்கல் தினத்தன்று சபரிமலையில் ஜோதி காண பெரும் பக்தர்கள் கூட்டம் திரள்வது வழக்கம், அவர்கள் ஜோதியை கண்டுவிட்டு பின்னர் சபரிகிரி வாசனுக்கு நெய் அபிஷேகம் செய்தபின் சொந்த ஊருக்குத் திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் இந்தாண்டு வெள்ளிக்கிழமை ஜோதியைக் கண்டுவிட்டு சனிக்கிழமை நெய் அபிஷேகத்தை முடித்துவிட்டு அன்று மாலையே கிளம்பினாலும்கூட ஞாயிறு தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் எல்லையைக் கடக்க முடியுமா என்ற கலக்கத்தில் உள்ளனர்.
அதேபோல ஐயப்பனுக்கு ஆந்திரா, தெலங்கானாவிலும் பக்தர்கள் கூட்டம் அதிகம் என்பதால் அவர்கள் தமிழ்நாடு வழியாகத்தான் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள். ஆகவே தமிழ்நாடு அரசு பக்தர்களுக்கு தெளிவான வழிகாட்டுதலை ஏற்படுத்த வேண்டும் என்றும், இந்தாண்டு ஜனவரி 19ஆம் தேதி கோயில் நடை சாத்தப்படுவதால் அன்று வரை கேரளாவைப்போல ஐயப்ப பக்தர்களுக்கு மட்டும் போக்குவரத்தில் தளர்வு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கைவிடுக்கின்றனர் பக்தர்கள்.
தெளிவான ஆணையை வெளியிடுமா தமிழ்நாடு அரசு? தமிழ்நாட்டு பக்தர்கள் மட்டுமல்லாமல் ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி பக்தர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். பக்தர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்குமா அரசு என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வு இன்று நடந்தது