திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ” மூன்று மாதத்திற்கு ஒருமுறை நடைபெறும் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் விரைவில் தேர்தல் வர உள்ளதால் அதற்கு முன்னதாகவே வளர்ச்சித் திட்டங்களை விரைந்து முடிக்க 43 மத்திய மற்றும் மாநில அரசு துறைகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கரோனா பரவல் மேலும் அதிகரிக்கும் அச்சமுள்ளது. அதனால் அதை தடுக்க மாவட்ட நிர்வாகம் தயாராக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
7 பேர் விடுதலை தொடர்பாக சட்டப்படியே அனைத்து செயல்பாடுகளும் இருக்க வேண்டும். சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். வாரிசு அரசியல் என்பது அனைத்து அரசியல் கட்சியிலும் இருக்கிறது. அரசியல்வாதியின் மகன் அரசியலுக்கு வரக்கூடாது என்பது கிடையாது. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மக்கள்தான் அதை முடிவு செய்ய வேண்டும்.
வேல் யாத்திரைக்கு ஒரு நீதியாகவும், உதயநிதி ஸ்டாலினின் பரப்புரைக்கு ஒரு நீதியாகவும் வேறுபாடு காட்டக்கூடாது. முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கூட்டங்களை நடத்தி மக்களை எளிதாக சந்திக்கும்போது, எதிர்க்கட்சிகளை மட்டும் சந்திக்க விடாமல் தடுப்பது சரியல்ல ” என்றார்.
இதையும் படிங்க: திமுக பிரமுகர் கொலை வெறித்தாக்குதல் : மாநகரக் காவல் ஆணையரிடம் புகார்