திருச்சி: நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில், திருச்சி மலைக்கோட்டை மாநகராட்சியில் திமுகவினரிடையே கோஷ்டி சண்டை இருந்து வந்தது. அமைச்சர் கே.என். நேரு மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷின் ஆதரவாளர்களிடையே கோஷ்டி பூசல் இருந்தது. இதில், இருதரப்பினருக்கும் கவுன்சிலர் சீட்டு சரிபாதியாக வழங்கப்பட்ட நிலையில், அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் வெற்றி பெற்றனர்.
அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளராக அறியப்பட்ட ஸ்ரீரங்கம் பகுதிச்செயலாளரான ராம்குமார், அமைச்சருக்கு நெருக்கம் என்பதால் யாரையும் மதிப்பது இல்லை, கட்சியில் மூத்தவர்களுக்கு மரியாதை கொடுப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே ராம்குமார், கட்சிக்கு சம்மந்தமே இல்லாத அவருடைய மனைவியை, தேர்தலில் நிற்கவைத்து வெற்றி பெற வைத்ததோடு, மண்டலத் தலைவராகவும் ஆக்கி அழகு பார்த்தது திமுகவினரில் ஒரு தரப்பின் ஆத்திரத்தை மேலும் தூண்டியது.
இந்நிலையில் இன்று ஸ்ரீரங்கம் மண்டலத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டாள் ராம்குமார் மண்டல அலுவலகத்தில், காலை 10.30 மணிக்கு பதவியேற்க திட்டமிடப்பட்டிருந்தது. சரியாக 10.25 மணிக்கு அமைச்சர் கே.என்.நேரு, மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி மற்றும் கவுன்சிலர்கள் அனைவரும் வந்து காத்திருக்க, பதவியேற்க வேண்டிய ஆண்டாள் ராம்குமார் வரவில்லை. இதனால், ஐந்து நிமிடம் காத்திருந்த அமைச்சர் கே.என்.நேரு காரில் ஏறி சென்றுவிட்டதாக தெரிகிறது. ஆண்டாள் ராம்குமார் திட்டமிட்டு அமைச்சரை புறக்கணித்ததாகவும், வளர்த்த கிடா மார்பில் பாய்கிறது என்றும் பேசப்பட்டது.
இதையும் படிங்க: 18 வயது திருநங்கைகளுக்கும் உதவி தொகை வழங்க பரிசீலனை - அமைச்சர் கீதா ஜீவன்