கடந்த 2020ஆம் ஆண்டு கரோனா முதல் அலையின் போது ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு உதவ ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தை, சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் என்ற முறையில் முன்னின்று செயல்படுத்தி வந்தவர் ஜெ. அன்பழகன். ஜூன் 1ஆம் தேதி வரை நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வந்த அவர். கரோனாவால் பாதிக்கப்பட்டு ஜூன் 2ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது பிறந்த நாளான ஜூன் 10 ஆம் தேதி மரணம் அடைந்தார். இந்தியாவில் கரோனாவுக்கு உயிரிழந்த முதல் எம்எல்ஏ ஜெ அன்பழகன் என்பது சோகத்திலும் உச்சம்.
இந்நிலையில் ஜெ.அன்பழகன் மறைந்து ஓராண்டு ஆன நிலையில், திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின், விடுத்துள்ள பதிவில் "கழகத்தின் மாவீரன், என் நெஞ்சம் நிறைந்த அன்பு உடன்பிறப்பாம், ஜெ.அன்பழகனை நாம் பிரிந்து ஓராண்டாகிறது.
அவர் ஆற்றிய களப்பணிகள் மக்கள் நெஞ்சங்களில் என்றும் இருக்கும்! மக்கள் நலன் காத்த மகத்தான தொண்டரான அவரது கனவுகளை கழக அரசின் வழியாக நிறைவேற்றி என்றென்றும் அவர் நினைவைப் போற்றுவோம்" என தெரிவித்துள்ளார்.
திமுகவின் மூத்த தலைவர் பழக்கடை ஜெயராமனின் மகனான ஜெ.அன்பழகன், தந்தையை போலவே கட்சி பணிகளில் தீவிர ஈடுபாடு கொண்டவர். மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதிக்கு நெருக்கமான மாவட்ட செயலாளர்களில் அன்பழகனும் ஒருவர். பகுதி செயலாளராக இருந்து படிப்படியாக கட்சியில் முன்னேறியவர்.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக தென் சென்னை மாவட்டச் செயலாளராக பதவி வகித்தவர். 2001, 2011 மற்றும் 2016 என மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினராக பதவி வகித்தவர். சட்டப்பேரவை விவாதத்தின் போது எதற்கு அஞ்சாமல் துணிச்சலாக தனது வாதங்களை எடுத்து வைப்பதில் அன்பழகன் கைதேர்ந்தவர்.
அன்பு பிக்சர்ஸ் பெயரில் ஜெயம் ரவியின் ஆதிபகவன் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். சந்தீப் கிஷன் நடித்த ‘யாருடா மகேஷ்’ என்ற படத்தை விநியோகம் செய்துள்ளார்.