திருச்சி: மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்தநாளான இன்று (செப்-14) தமிழ்நாடு முழுவதும் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறை பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்கான ஏற்பாடுகளை அக்கட்சியினர் வழக்கம்போல் மேற்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு திடீரென திரண்ட அதிமுகவினர் தங்களது கட்சிக்கொடி, தோரணம் மற்றும் அட்டைகளில் வரையப்பட்ட இரட்டை இலை சின்னத்தையும் சிலைக்கு அருகில் அமைத்ததால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதனைத்தொடர்ந்து அண்ணா யாருக்கு சொந்தம் என்பதில் வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. அப்போது நிகழ்விடத்துக்குச்சென்ற காவல் ஆய்வாளர் கோபி தலைமையிலான காவல் துறையினர் இருதரப்பினரையும் சமரசம் செய்தனர்.
அண்ணா பிறந்தநாளன்று அவர் யாருக்குச் சொந்தம் என திமுக - அதிமுக கட்சியினருக்கிடையே ஏற்பட்ட மோதல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:காலை சிற்றுண்டி திட்டத்தை ஆரம்பித்த முதலமைச்சரே அதை அவமானப்படுத்தியுள்ளார் - ஜெயக்குமார் குற்றச்சாட்டு