திருச்சியில் கள்ளத் துப்பாக்கிகள் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கடந்தாண்டு ஜனவரி மாதம் 26ஆம் தேதி திருச்சி காவல் துறையினர் விசாரணைமேற்கொண்டனர். அப்போது திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் கள்ளத் துப்பாக்கிகளை விற்க முயன்ற காவலர் பரமேஸ்வரன் என்பவரிடமிருந்து, இரண்டு துப்பாக்கிகளுடன் பத்து தோட்டக்களையும் சேர்த்து கைப்பற்றினர். பரமேஸ்வரன் மீது திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் வழக்கு சிபிசிஐடி பிரிவிற்கு மாற்றப்பட்டு காவலர் பரமேஸ்வரனின் கூட்டாளிகளான நாகராஜ், சிவா, எட்டப்பன், கலைசேகர், திவ்யபிரபாகரன், கலைமணி ஆகியோரும் கைதுசெய்யப்பட்டனர்.
இவர்களுக்கு துப்பாக்கி விற்பனை செய்த மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமுராரி திவாரி என்பவரையும் சிபிசிஐடி காவல் துறையினர் கைதுசெய்தனர். பின்னர் அவர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தை சேர்ந்த பன்சிங் தாக்கூர் என்பவரை பல முறை மத்தியபிரதேசம் சென்று தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில், தலைமறைவாக இருந்த பன்சிங் தாக்கூர் போபாலில் தங்கியிருப்பதாக சிபிசிஐடி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, போபால் சென்ற காவல் துறையினர் கடந்த 27ஆம் தேதி பன்சிங் தாக்கூரை கைதுசெய்தனர். தற்போது சிபிசிஐடி காவல் துறையினர் பன்சிங் தாகூரை திருச்சிக்கு அழைத்து வருகின்றனர். நாளை அவரை திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைப்பார்கள் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இரட்டை கொலை வழக்கு - இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை