திருச்சி: மணப்பாறை அடுத்த நடுப்பட்டியைச் சேர்ந்தவர் நித்யா தேவி.இவர் திருச்சியில் உள்ள சட்டக் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயின்று வருகிறார். இந்நிலையில் நேற்று(ஜூலை.22) மாலை தேர்வு முடிந்து வீட்டிற்கு வருவதற்காக திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் வேளாங்கண்ணியிலிருந்து பழனி செல்லும் TN 65 N- 1216 அரசு பேருந்தில் ஏறி நடுப்பட்டி-க்கு பயணச்சீட்டு வாங்கியுள்ளார்.
இதனையடுத்து பேருந்து பொன்னம்பலம் பட்டி சுங்கச்சாவடி அருகே சென்ற போது, நடுப்பட்டியில் பேருந்து நிற்காது. அதனால் அய்யலூரில் இறங்கிக் கொள்ளுங்கள் என நடத்துனர் மீனாட்சி சுந்தரம் மாணவியிடம் தெரிவித்துள்ளார்.
அதனை ஏற்க மறுத்த மாணவி தகவலை தனது உறவினர்களிடம் தெரிவித்ததையடுத்து, நடுப்பட்டி மேம்பாலத்தில் ஒன்று கூடிய மாணவியின் உறவினர்கள் அரசுப் பேருந்தை இடைமறித்து நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அங்கு சென்ற வையம்பட்டி உதவி காவல் ஆய்வாளர் வினோத் தலைமையிலான காவல்துறையினர், இருதரப்பினரிடமும் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இறங்க வேண்டிய நிறுத்தத்திலேயே பேருந்தை நிறுத்தி இறங்கி, துணிச்சலாக செயல்பட்ட சட்டக் கல்லூரி மாணவி நித்யா தேவி-யை பொதுமக்கள் பாராட்டினர்.
இதையும் படிங்க: வனத்துறையினரின் வலையில் சிக்கிய இரண்டு கரடிகள்!