திருச்சி: மணப்பாறை அடுத்த கரும்புளிபட்டியைச் சேர்ந்த பன்னீர் செல்வம் (60) என்ற விவசாயி, கடந்த 2006ஆம் ஆண்டு குளித்தலையில் உள்ள எஸ்பிஐ வங்கியில், வீடு மற்றும் விவசாய நிலத்தின் பத்திரத்தை அடமானமாக வைத்து, ரூ.12 லட்சம் கடன் வாங்கி டிராக்டர் வாங்கியுள்ளார்.
அதற்கு மாதாமாதம் தவணை செலுத்தி வந்த நிலையில், பொருளாதார நெருக்கடி காரணமாக சில மாதங்கள் தவணையை செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வங்கி தரப்பிலிருந்து, தவணை கட்டவில்லை என்றால் சொத்துக்கள் ஏலம் விடப்படும் என்று, பன்னீர்செல்வத்தின் வீட்டில் நோட்டீஸ் ஒட்டியும், அவருக்கு தனிப்பட்ட முறையிலும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதை பன்னீர்செல்வம் கவனிக்காமல் இருந்ததாக தெரிகிறது. இதனால், 58 லட்ச ரூபாய் கடனுக்காக, பன்னீர்செல்வத்தின் வீடு மற்றும் 11 ஏக்கர் விவசாய நிலத்தை இணையதளம் மூலம் ஏலம் விட்டுள்ளனர். இதனை ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் மற்றும் ஜாபர் சாதிக் இருவரும் ஏலம் எடுத்துள்ளனர்.
நிலம் ஏலம் விடப்பட்டதை கண்டித்து, தமிழ்நாடு விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் சங்க நிர்வாகிகள் வங்கி நிர்வாகத்துடன் வாய்த்தகராறில் ஈடுபட்டனர். இந்நிலையில் நிலத்தை வாங்கியவர்கள் நீதிமன்ற உத்தரவோடு, மணப்பாறை அரசு நில அளவையர் ஜெயராஜ், கிராம நிர்வாக அலுவலர் பெரியண்ணன் ஆகியோர் முன்னிலையில் இன்று காலை நிலத்தை அளக்க முற்பட்டனர்.
அப்போது, அய்யாகண்ணு மற்றும் அவரது ஆதரவாளர்கள் நிலம் அளப்பதை தடுத்து நிறுத்தி, இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், முப்பது நாள்கள் கால அவகாசம் கொடுங்கள் என்று கேட்டுள்ளனர். இதையடுத்து நிலத்தை அளக்காமல் சென்று விட்டனர். வழக்கு நிலுவையில் இருக்கும்போது, நிலத்தை அளக்க முயன்ற சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.