திருச்சி: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் ஆறாவது நாளாக இன்று (மார்ச் 25) காலை கையெழுத்திட்டார்.
அதன்பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், "திருச்சியில் தங்கியிருந்த 14 நாள்கள் அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் என அனைவரும் பாசத்தை பொழிந்தார்கள்" என்றார்.
'திமிர் காட்டும் நிதியமைச்சர்': முதலமைச்சரின் துபாய் பயணம் குறித்த கேள்விக்கு, "விதை போட்டது அதிமுக, அதனை செயல்படுத்த வேண்டும். ஆனால், தற்பொழுது இவர்கள் என்ன கிழிக்கபோகிறார்கள் எனப் பார்ப்போம். துபாய் பயணம் அரசுமுறை பயணமா?, சொந்தப் பயணமா என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்ற தேதியா குறித்தோம் என்றும் தற்போது அதையெல்லாம் நிறைவேற்ற வேண்டும் என சட்டம் இல்லை என்றும் திமிர்த்தனமாக நிதியமைச்சர் பேசுகிறார்.
தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதியில் 2 கோடியே 14 லட்சம் பேருக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என குறிப்பிட்டுள்ளார்கள். ஐந்து வருடங்களில் கணக்கிட்டு பார்த்தால் 1.25 லட்சம் கோடி ரூபாய் செலவாகும். இதெல்லாம் பட்ஜெட்டில் கொடுப்பதற்கு வாய்ப்பில்லை, மக்களை ஏமாற்றுகிறார்கள். பால் விலை முதல் பஸ் கட்டணம் வரை, சொத்து வரி போன்ற அனைத்தையும் உயர்த்தி, அடுத்து தமிழ்நாடு மக்களுக்கு பரிசு கொடுக்க திமுக காத்துக் கொண்டுள்ளது.
கிணற்றில் போட்ட கல்லாக திமுக: 208 திட்டங்களை நிறைவேற்றியதாக சட்டப்பேரவையில் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள். விநாயகருக்கு 108 தேங்காய் உடைத்தேன் என சொல்வது போல் உள்ளது. திமுக அரசு பொறுப்பேற்றதும் பொருளாதார நிபுணர்களை நியமித்தது. அவர்கள் என்ன அறிக்கை கொடுத்தார்கள் என்பதை வெளிப்படையாக சொல்லுங்கள்.
நிதி நிலையை உயர்த்துவதற்கு என்ன வழிமுறைகளை கொடுத்தார்கள், இதையெல்லாம் விட்டுவிட்டு கிணற்றில் போட்ட கல் போல திறமையற்ற நிர்வாகமாக இருப்பது வருத்தப்படக்கூடிய, வேதனைப்படக்கூடிய விஷயமாக உள்ளது" எனக் ஜெயக்குமார் தெரிவித்தார்.
மீண்டும் உங்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகிய உள்ளதே என்ற கேள்விக்கு, "அதிமுகவின் எழுச்சியைப் பார்த்து திமுக பொறுத்துக் கொள்ள முடியாமல் வழக்கு போடுகிறார்கள். இது மன்னராட்சி அல்ல, மக்களாட்சி. நீதிமன்றத்தை நம்புகிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி தவறு செய்யும்போது நீதிமன்றம் தட்டிக் கேட்கும் என்று நம்புவதால் எங்களுக்கு பயமில்லை" எனக் குறிப்பிட்டார்.
ஜெயகுமாருக்கு நீதிமன்றம் விதித்த 2 வாரம் (6 நாள்கள்) நிபந்தனை ஜாமீன் கையெழுத்து இன்றுடன் (மார்ச் 25) முடிவடைகிறது. கையெழுத்து இட்ட கையோடு திருச்சியில் இருந்து கார் மூலம் சென்னை புறப்பட்டார்.
இதையும் படிங்க: அம்பேத்கர் பிறந்த நாளில் தேசிய விடுமுறை- திருமாவளவன் எம்.பி., கோரிக்கை!