திருச்சி: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மணப்பாறை நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் திமுக கூட்டணி 11 இடங்களிலும், அதிமுக 11 இடங்களிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 5 இடங்களிலும் வெற்றிபெற்றது. இதையடுத்து மணப்பாறை நகர்மன்ற தலைவர் பதவியை திமுக கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுக 15 வாக்குகள் பெற்று நகர்மன்ற தலைவர் பதவியை முதன்முறையாக கைப்பற்றியது.
இதையடுத்து, நகர்மன்ற துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலின்போது, திமுக கூட்டணி சார்பில் மனுத்தாக்கல் செய்யவும், வாக்களிக்கவும் உறுப்பினர்கள் வராமல் புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்ததால், தேர்தல் இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று (ஏப் 17) காலை அதிமுகவைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர் செல்லம்மாள், வாணி ஆகிய இருவரும் நகர்ப்புற ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இந்த சம்பவம், அதிமுகவினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நகர்மன்ற தலைவர் பதவியை திமுக கைப்பற்ற வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: 'இந்தி மொழி விஷயத்திலும் திமுக இரட்டை வேடம் - ஓ.பன்னீர்செல்வம்'