திருச்சி மாவட்டம் துறையூர் அருகே எஸ்.எஸ்.புதூர் பகுதியில் கோவில் திருவிழா இன்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக முசிறி பேரூரைச் சேர்ந்த 19 பேர், சிறிய ரக சுமையுந்தில் சென்றுள்ளனர். திருமானூர் அருகே சென்றபோது வாகனத்தின் சக்கரம் வெடித்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதையடுத்து வாகனம் சாலையோரம் இருந்த தடுப்பு வேலியை உடைத்துக் கொண்டு சுமார் 100 ஆழம் கொண்ட கிணற்றுக்குள் பாய்ந்ததுள்ளது.
இதில் வாகனத்தில் பயணம் செய்த 19 பேரும் கிணற்றுக்குள் விழுந்து மரண ஓலமிட்டனர். சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து மீட்டு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்புத் துறையினரும், காவல்துறையினரும் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். எனினும் பேரூரைச் சேர்ந்த 8 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். காயமடைந்தவர்கள் திருச்சி, துறையூர் அரசு பொது மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் குணசீலன், குமார், கோமதி, கயல்விழி, சரண்குமார் ஆகியோரும் குழந்தைகள் சஞ்சனா (4), யமுனா (8), எழிலரசி (6) என 3 குழந்தைகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச் செல்லக்கூடாது என்ற விதி உள்ளது. அதையும் மீறி சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச் சென்றபோது இந்த கோர விபத்து நடந்துள்ளது. இது குறித்து துறையூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.