திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் செக்போஸ்ட் அருகே அழகிரிபுரம் என்ற பகுதியில் உள்ள கொள்ளிடம் பாலம் அருகே இரண்டு மதுபான கடைகள் அடுத்தடுத்து உள்ளன. ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்ட இந்த இரு மதுபான கடைகளும் நேற்று திறக்கப்பட்டன. அப்போது நூற்றுக்கணக்கானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.
திருச்சி மாநகரில் 71 மதுபான கடைகள், புறநகரில் 112 மதுபான கடைகள் உள்ளன. இவற்றில் 20 கடைகள் கரோனா கட்டுபாட்டுப்பகுதியில் அமைந்திருப்பதால், அவை திறக்கப்படவில்லை. மீதமுள்ள 163 கடைகள் மட்டுமே திறக்கப்பட்டன. இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்று காலை 10 மணிக்கு மதுபான கடைகள் திறக்கப்பட்டன.
அப்போது திருவானைக்காவல் - அழகிரிபுரம் பகுதி பெண்கள் திரண்டு வந்து மதுபான கடைகளை முற்றுகையிட்டு கடையை மூட வேண்டும் என்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த ஸ்ரீரங்கம் தாசில்தார் ஸ்ரீதர், ஸ்ரீரங்கம் காவல் சரக உதவி ஆணையர் ராமச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து வந்து பெண்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பெண்கள் ஆத்திரத்தில் ரேஷனில் இலவசமாக வழங்கப்பட்ட அரிசியை சாலையில் கொட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று திறக்கப்பட்ட கடையால் அழகிரிபுரம் பகுதியில் பெரும் தகராறு ஏற்பட்டது என்றும்; வீடுகளிலும் வன்முறை வெடித்தது என்றும் அதனால் கடைகளை மூட வேண்டும் என்றும் பெண்கள் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து கடைகளை மூடுவதாக அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதையடுத்து இரு டாஸ்மாக் மதுபான கடைகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:
'ஐயா... முதலமைச்சரால் மதுபானம் கிடைச்சிருச்சு' - டாஸ்மாக்கில் ஆடிப்பாடி கொண்டாடிய தாத்தா