திருப்பூர்: ஊதியம் தராமல் அடிமைகளாக நடத்தப்பட்ட ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளர்கள் 19 பேர் மீட்கப்பட்டனர்.
தண்ணீர் பந்தல் பகுதியிலுள்ள ஜெய் ஸ்ரீராம் அப்பேரல் இன்டஸ்ட்ரி என்ற தனியார் பின்னலாடை நிறுவனத்திற்கு, ஒரிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் இருந்து 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 இளம் பெண்கள் பணிக்கு வந்துள்ளனர். மூன்று மாதம் பயிற்சி காலத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் ஊதியமும், மூன்று மாதங்களுக்கு பிறகு வழங்க வேண்டிய ஊதியமும் இவர்களுக்கு முறையாக வழங்காமல் அதிக வேலை வாங்கியதாகக் கூறப்படுகிறது.
எனவே, தொடர்ந்து பணி செய்ய பிடிக்காமல் சொந்த ஊருக்கு செல்ல முயன்றபோது, அதற்கும் நிறுவனம் அனுமதிக்காததால், பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். இளம் பெண்களின் உறவினர்கள் ஒரிசா மாநிலத்தில் கொடுத்த புகாரின் பேரில், திருப்பூர் மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து காவல் ஆணையர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் பின்னலாடை நிறுவனத்தை ஆய்வு செய்தபோது, 19 இளம் பெண்களும் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட பெண்களை ஆலப்புழா - தன்பாத் விரைவு தொடர்வண்டி மூலம் சொந்த ஊருக்கு பாதுகாப்பாக நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர்.