திருப்பூர் கே.வி.ஆர் நகர் பகுதியில் திருமலா பைனான்ஸ் என்ற தனியார் நகை அடகுக் கடை செயல்பட்டுவருகிறது. இங்கு கடையின் உரிமையாளருக்கும், அவரது சகோதரருக்கும் இடையே ஏற்பட்ட சொத்து தகராறு காரணமாக, அவரது சகோதரர் கடையைப் பூட்டிட்டு சாவியை எடுத்துச் சென்றுள்ளார்.
இதனால் ஞாயிற்றுக்கிழமை காலை கடை திறக்கப்படாமல் இருந்துள்ளது. அடகு வைத்த நகையை மீட்க வந்த பொதுமக்கள், கடை திறக்கப்படாமல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அப்போது சகோதரர்களுக்கிடையே சொத்து தகராறு காரணமாகக் கடை பூட்டப்பட்டதை நகையின் உரிமையாளர்கள் தெரிந்து கொண்டனர்.
உடனடியாக தங்கள் நகையை மீட்டுத் தர வேண்டும் எனக் கோரி மத்திய காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு திடீரென மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறையினர், நகையை உடனடியாக மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து நகை உரிமையாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.