திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தொகுதி திமுக வேட்பாளர் சாமிநாதன், பல்லடம் தொகுதி மதிமுக வேட்பாளர் முத்துரத்தினம் , தாராபுரம் தொகுதி வேட்பாளர் கயல்விழி செல்வராஜ் ஆகியோரை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் காங்கேயம் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.
திமுகவே வீழ்த்த யாரும் பிறக்கவும் இல்லை; பிறக்கவும் முடியாது
அப்போது பேசிய அவர், "முதலமைச்சர் பழனிசாமி தோல்வி பயத்தில் உளறிவருகிறார். சாகும் நேரத்தில் சங்கரா, சங்கரா என்பது போல கடைசி நேரத்தில் புலம்பிவருகிறார். திமுகவை வீழ்த்த தன்னையே பலியிட தயார் என முதலமைச்சர் பேசியிருக்கிறார். ஆக, தேர்தலுக்கு முன்பாகவே தோல்வியை ஒப்புக்கொண்டார். திமுகவை அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்துள்ளார்களே தவிர திமுகவை அழிக்க முடியாது.
திமுகவை வீழ்த்த இன்னும் ஒருவர் கூட பிறக்கவில்லை. பிறக்கவும் முடியாது. கலைஞர் இல்லை, அதனால் திமுகவை வீழ்த்தி விடலாம் என முட்டாள்கள் நினைக்கின்றனர். 234 தொகுதிகளிலும் அவர் நிறைந்துள்ளார். திமுகவை வீழ்த்த உங்கள் உயிரை எல்லாம் தர வேண்டாம். நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும். திமுக ஆட்சியை பார்க்க நீங்கள் இருக்க வேண்டும்" என தெரிவித்தார்.
பாஜகவின் குட்டிக்கரணம் செல்லுப்படியாகாது
தொடர்ந்து பேசிய அவர், "பாஜக என்ன குட்டிக்கரணம் போட்டாலும் இங்கு வரபோவதில்லை. அவர்கள் வாஷ் அவுட் என்பது நாடாளுமன்ற தேர்தலின் போதே தெரிந்து விட்டது. அதிமுக ஒரு இடத்தில் கூட வரக்கூடாது. நான் பொறாமையில் சொல்லவில்லை. அதிமுகவினர் எம்எல்ஏவாக வந்தால் பாஜக எம்எல்ஏவாகதான் இருப்பார்கள். ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் செய்யறான் என்ற ரஜினி படம் வசனம் போல , ஸ்டாலின் சொல்கிறான் அதை முதலமைச்சர் செய்கிறார்.
இந்த தேர்தல் என்பது ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதோடு , நீட் திணிப்பு , இந்தி திணிப்பு , மாநில உரிமைகள் பறிப்பு , சுயமரியாதை இழப்பு போன்றவைகளை எல்லாம் மீட்டெடுக்க உதயசூரியன் சின்னத்தை ஆதரிக்க வேண்டும்" என்றார். முன்னதாக அவ்வழியே வந்த ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிடச் சொல்லி, வாகனம் சென்ற பிறகு தனது பரப்புரையை மேற்கொண்டார்.