திருப்பூர்: கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி திருப்பூரில் கரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு கடந்த வாரம் முதல் மாவட்ட ஆட்சியர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இதில், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் விடுமுறை நாள்களில் கடைகள் அடைக்கும் படி உத்தரவிடப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று (ஆகஸ்ட் 08) திருப்பூர் மாவட்டத்தில் அத்தியாவசிய கடைகளைத் தவிர பெரும்பாலான வணிக நிறுவனங்கள், துணிக்கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டிருந்தது. இதனிடையே திருப்பூர் நஞ்சப்பா பள்ளி எதிரே உள்ள சாலையோர வியாபாரிகள் மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டை மீறி கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்தனர்.
இதனால், அந்த கடைகளில் பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர். அங்கு வந்த திருப்பூர் வடக்கு காவல் துறையினர், மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை மீறி கடைகளை திறந்து வைத்திருந்த 20க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு தலா 500 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: மூடப்பட்டு இருக்கும் கடைகளை உடனடியாக திறக்க வேண்டும் - விக்கிரமராஜா