திருப்பூர் சி.டி.சி கார்னர் பகுதியில் இன்று, திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை செய்தார். திருப்பூர் தெற்கு, வடக்கு, அவிநாசி, பல்லடம் ஆகிய 4 தொகுதிகளின் வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரித்த அவர், அங்கு கூடியிருந்த மக்களிடையே பேசினார்.
அப்போது, “10 ஆண்டுகளாக தமிழகத்தை பாழ்படுத்தியுள்ளது அதிமுக அரசு. ஒவ்வொருவர் தலையிலும் 62 ஆயிரம் ருபாய் கடன் வைத்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்களின் வரிப்பணத்தை வைத்து விளம்பரம் செய்து வருகிறார். மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தபோது, என்ன செய்தது என அவர் கேட்டுள்ளார். தமிழுக்கு செம்மொழி தகுதி, செல்ஃபோனில் கட்டணமில்லா சேவை, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்டவற்றை கொண்டு வந்தது திமுக.
ஆனால், மத்திய அரசுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக என்ன திட்டங்களை கொண்டு வந்தது என பழனிசாமியால் சொல்ல முடியுமா? முதலில் மதுரை எய்ம்ஸ்-ன் நிலைமை என்ன என அவரால் கூற முடியுமா? கஜா புயல் நிவாரண தொகையை மத்திய அரசிடம் கேட்டு பெறக்கூட தெம்பில்லாதவர் பழனிசாமி. கருணாநிதி, ஜெயலலிதா இருந்த வரை வராத நீட் தேர்வை வர வைத்தவர் இவர்தான்.
மதவெறியை தூண்டும் பாஜகவின் மோடி மஸ்தான் வேலை தமிழகத்தில் பலிக்காது. இது திராவிட மண். இது ஆட்சிக்கு வருவதற்கான தேர்தல் அல்ல, சுயமரியாதைக்கான தேர்தல். அதிமுக வேட்பாளருக்கு வாக்களித்து அவர் ஒருவேளை வெற்றி பெற்றாலும், அவர் அதிமுக எம்.எல்.ஏவாக இருக்க மாட்டார். பாஜக எம்.எல்.ஏவாகத் தான் இருப்பார். ஆனாலும், அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற வாய்ப்பில்லை” என்று கூறினார்.
இதையும் படிங்க: ‘திமுகவினர் கலாட்டா செய்யாத ஒரே கடை சாக்கடை!’