திருப்பூர்: தமிழ்நாட்டின் 6ஆவது பெரிய நகரம், 'டாலர் சிட்டி', குட்டி ஜப்பான், நாட்டிற்கு அந்நியசெலாவணி ஈட்டித்தருவதில் முக்கிய பங்கு வகிக்கும் நகரம். பின்னலாடை பற்றி யோசிக்கும் உலக நாடுகள், தேர்வு செய்யும் முதல் நகரம். கொடிகாத்த குமரன் பிறந்த ஊர் என பல பெருமைக்கு சொந்தக்கார ஊர் திருப்பூர்.
'கெட்டும் பட்டணம் போ' என்பதற்கிணங்க, கெட்டுப்போய், வாழ வழியில்லாமல் வந்தவர்களையும், ஊர் திரும்பி பார்க்கும்படி வாழ வைக்கும் ஊர் திருப்பூர். தென்மாவட்டங்களில் இருந்து வேலை தேடி செல்பவர்களுக்கு, வாழ்க்கை அமைத்து கொடுப்பதில் இந்த நகரத்திற்கு முக்கிய பங்கு உண்டு. திருப்பூரின் இந்த பெருமைகளுக்கு காரணமெல்லாம் அங்கு நடைபெறும் பின்னலாடை தொழில்.
கடந்த 1980களுக்கு பின்னர் தொடங்கி , சூடுபிடிக்கத் தொடங்கிய பின்னலாடைத் தொழில், திருப்பூர் நகரை வேகமாக வளர்ச்சியடையும் தொழில் நகரமாக மாற்றியது. 90களின் உலகமயமாதலை உள்வாங்கி வளர்ந்த இந்த நகரம், விரைவில் பின்னலாடைத் தொழிலில் உலகின் கவனம் பெற்ற நகரமாக மாறியது.
இந்த மாற்றங்கள், ஆண்டொன்றுக்கு, 25 ஆயிரம் கோடி உள்நாட்டு உற்பத்தி, 25 ஆயிரம் கோடிக்கு பின்னலாடை ஏற்றுமதி என திருப்பூரை பிசியான நகரமாக மாற்றியது. இதன் மூலம், நேரடியாக மூன்று லட்சம் தொழிலாளர்கள், மறைமுகமாக 5 லட்சம் தொழிலாளர்கள் என, 8 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.
சின்ன சின்னதாக வீட்டில் ஆர்டர் எடுத்து வேலை செய்யும் அளவிற்கு திரும்பிய பக்கமெல்லாம் பின்னலாடைத் தொழில் நிறைந்திருக்கும் இந்நகரத்தில், பார்க்கும் பத்து பேரில் 7 பேர் பின்னலாடைத் தொழிலாளர்களே!
வருடம் முழுவதும் இடைவிடாது உழைத்துக் கொண்டிருக்கும் இந்நகரத் தொழிலாளர்களுக்கு பண்டிகை காலங்கள் கொஞ்சம் விசேஷம்தான். தீபாவளி காலங்களில் குவியும் ஆர்டர்களை முடித்துக் கொடுக்க, இரவு பகல் பாராமல் உழைக்கும் தொழிலாளர்களின் வலிக்கு மருந்திட்டு மகிழ்வது, வேலை முடிந்து கையில் கிடைக்கும் கூடுதல் சம்பளமும் போனசும்!
கொண்டாட்டங்களுக்கு மட்டுமின்றி வீட்டுத் தேவைகள், வாகன சேர்க்கை என ஏதாவது ஒரு அத்தியாவசியத் தேவைகளை நிறைவு செய்ய உதவி செய்கின்றன இந்த பண்டிகைக் கால உழைப்பின் ஊதியங்கள்!
இந்த ஆண்டு அந்த வாய்ப்பைத் தட்டிப் பறித்திருக்கிறது கரோனா பொதுமுடக்கம். உலக மாற்றங்களை எல்லாம் உள்வாங்கி வளர்ந்த நகரம், பொது முடக்கத்தை தாக்கு பிடிக்க முடியாமல் கொஞ்சம் தடுமாறி போயிருக்கிறது.
வழக்கமாக, தீபாவளிக்கு 5 மாதங்களுக்கு முன், அதற்கான ஆர்டர்கள் வரத்தொடங்கி விடும். இந்த தீபாவளிக்கு ஐந்து மாதங்களுக்கு முன்பு பொது முடக்கம் அமலில் இருந்ததால், ஆர்டர்கள் கிடைப்பதில் பிரச்னை இருந்தது. தளர்வுகள் அமல்படுத்தப்பட்ட காலத்திலும், 50 விழுக்காடு மக்கள் தான் செய்ய பணிசெய்ய முடிந்தது.
'போன வருஷம் தீபாவளி நல்லா இருந்தது. கரோனா காரணமாக இந்த ஆண்டு சரியாக வேலை இல்லை. குடும்பத்துடன் 'ஜாப் ஒர்க்' எடுத்து வேலை செய்து வரும் எங்களில் பல பேருக்கு வேலை இல்லை. இதனால் தொழிலாளர்களுக்கு போனஸ் கூட கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்கிறார் வீட்டிலிருந்த படியே பின்னலாடை பணிகளை எடுத்து செய்து வரும் மோகன்.
பண்டிகை கால கூடுதல் வருமானத்தில், வீட்டிற்கு தேவையான கூடுதல் பொருட்கள் வாங்கிய நிலையில், வழக்கமான வருமானம் கூட இல்லாத இந்த தீபாவளியில், கடன்வாங்கி செலவு செய்யும் நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
'கரோனா தொற்று பரவல் காரணமாக, 3 மாதங்கள் முழு ஊரடங்கு இருந்தது. அதற்கு பிறகு தளர்வு அறிவிச்சாங்க, ஆனாலும் எங்களுக்கு எல்லாம் சரியா வேலை இல்லை. இப்போ தீபாவளியும் வந்துருச்சு. தீபாவளி வந்தாலே சம்பளம் வரும் போனஸ் வரும், புது துணி வாங்குவோம், வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவோம். இந்த வருஷம் வேலை இல்லாமல் இருந்ததால குழந்தைகளுக்கு கூட துணி எடுக்க முடியல. சம்பளம் கூட தாமதமா தர்றதால இந்த தீபாவளி நெருக்கடியான தீபாவளியாதான் இருக்கு என ஒட்டுமொத்த பின்னலாடை தொழிலாளர்களின் வேதனையை வெளிப்படுத்துகிறார் பனியன் கம்பெனி தொழிலாளியான பஞ்சவர்ணம்.
ஊருக்கே ஆடை தைத்து கொடுத்து மகிழ்ந்த தொழிலாளர்கள், தங்களுக்கு பண்டிகை கால புத்தாடை வாங்க முடியாமல் தவிக்கிறார்கள். காலம் விதைத்த எல்லா தடைகளையும் கடந்து வந்தவர்களுக்கு கரோனா தந்திருக்கும் தடுமாற்றம் சற்று அதிகம் தான். எப்போதும் மீண்டவர்கள் இப்போதும் மீள்வார்கள். இனி வரும் பண்டிகை காலங்கள் இந்த தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தரட்டும்.
இதையும் படிங்க: வீழ்வேன் என்று நினைத்தாயோ - வாழ்வின் இருள் விலக காத்திருக்கும் சக்கம்பட்டி நெசவாளர்கள்!