தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று கருதப்படும் திருப்பூர், தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவின் முக்கிய தொழில் நகரமாக விளங்குகிறது. வரப்போகும் பட்ஜெட்டில் தொழில்நகரான திருப்பூரில் உள்ள ஏற்றுமதியாளர் சங்கத்தின் எதிர்பார்ப்புகளை அமைப்பின் தலைவரும், செயலாளர்களும் பகிர்ந்துகொண்டனர்.
மூன்று முக்கிய கோரிக்கைகள்:
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் பேசியதாவது, 'புதிதாக பதவியேற்றுள்ள அரசுக்கு திருப்பூரின் தொழில் நடவடிக்கைளை பற்றி தெரியும் என்பதால் அவர்களிடம் மூன்று முக்கிய கோரிக்கையை எதிர்பார்த்துள்ளோம்.
- தொழிலாளர்களுக்கு குடியிருப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர மத்திய அரசு முன்வர வேண்டும்.
- பிரத்தியேக ஆராய்ச்சிக் கூடம் தேவை என்ற நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
- இந்திய பின்னலாடையின் தலைநகர் என்ற அந்தஸ்தை அடைந்துள்ள திருப்பூருக்கு பின்னலாடை வாரியம் ஒன்றை அமைத்துத் தர வேண்டும்.
அத்துடன் இந்த துறையை வளர்ப்பதுடன் நாட்டில் வேலைவாய்ப்பை அதிகளவில் உருவாக்க முடியும் எனத் தெரிவித்தார்.
கோவை விமானநிலையத்தை தரம் உயர்த்த வேண்டும்:
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க செயலாளர் விஜயகுமார் பேசியதாவது, தொழில்துறையினர் சந்திக்கும் வங்கி கடன் பிரச்னைகளை களைய அரசு முன்வரவேண்டும். குறிப்பாக வாரக்கடன் குறித்த சிக்கல்களை விரைந்து போக்க வேண்டும். தொழிலாளர்களுக்கான இ.எஸ்.ஐ மருத்துவமனை அடிக்கல் நாட்டப்பட்டு கிடப்பில் உள்ளது. அதை விரைந்து கட்டித்தர வேண்டும் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கோவை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டு, சரக்கு விமானங்கள் வந்து செல்ல வழிவகை செய்து தர வேண்டும். இதன் மூலம் சரக்குகளை பெங்களூர் சென்னை மார்க்கமாக அனுப்புவதற்கு பதிலாக கோவையிலிருந்து நேரடியாக கையாள முடியும். இவற்றின் பலனாக கால விரயமும் தவிர்க்கப்படும், போக்குவரத்து செலவு மீதமாகும் என்று கூறினார்.