தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கட்டாலங்குளம் கிராமம் உள்ளது. கயத்தார் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட இந்தக் கிராமத்தில் சுமார் 400 வீடுகள் உள்ளன. 1100 வாக்காளர்கள் உள்ளனர். இந்தக் கிராமத்தில் இறந்தவர்களின் உடலைப் புதைக்கவோ அல்லது தகனம் செய்யவோ சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள மயானத்துக்குச் செல்ல வேண்டும்.
ஏற்கனவே மயானத்துக்குச் சரியான பாதை கிடையாது. எனவே பாதை அமைத்துத் தர வேண்டும் எனக் கூறி இப்பகுதி மக்கள் கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்தில் மனுக்கள் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் வடகிழக்குப் பருவமழை கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து பெய்துவருகிறது. இதனால் கிராமப் புறங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் உள்ள நீர்நிலைகள் நிரம்பிவழிகின்றன. ஓடைகளிலும் நீர்வரத்து அதிகமாக உள்ளது.
இதற்கிடையே கட்டாலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மரியான் என்பவர் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார்.
இதையடுத்து அவரது உறவினர்கள் மரியான் உடலை அடக்கம் செய்ய தேவையான ஏற்பாடுகளைச் செய்தனர்.
தொடர்ந்து அவர்கள் மரியான் உடலை சுமந்துகொண்டு வயல்வெளி பாதை வழியாகச் சென்றனர். இந்தப் பாதையில் இரண்டு ஓடைகள் செல்கின்றன. ஒரு ஓடையில் ஓரடி அளவு தண்ணீரும் மற்றொரு ஓடையில் சுமார் 3 அடி அளவு தண்ணீரும் செல்கின்றன. மேலும் ஓடையின் கீழ்ப்பகுதியில் கரம்பை மண் இருப்பதால் கவனமாக கால் வைக்கவில்லை என்றால் வழுக்கிவிழும் நிலையில் இருந்தது. இதில் இறந்த மரியானின் உடலை சிரமப்பட்டு கொண்டுசென்று அடக்கம் செய்தனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், கட்டாலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், மயானத்துக்குச் செல்ல சரியான பாதை இல்லை என யூனியன் அலுவலகத்தில் மனு வழங்கியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது இறந்தவரின் உடலை மிகவும் சிரமப்பட்டுக் கொண்டுசென்று அடக்கம் செய்தோம்.
இங்குள்ள சரியான பாதை வழியில் சென்றால் இரண்டாவது ஓடையில் சுமார் 15 அடி அளவுக்கு தண்ணீர் செல்கிறது. அதில் செல்ல முடியாத சூழல் உள்ளதா நாங்கள் வயல்வெளிகளைச் சுற்றிதான் உடலைச் சுமந்துவந்தோம். மேலும் தனியார் விளைநிலம் வழியாகத்தான் செல்ல வேண்டும் என்பதால், சம்பந்தப்பட்டவரிடம் அனுமதி வாங்கி அதன் வழியாகக் கொண்டுசென்றோம்.
எனவே மயானத்துக்குச் செல்ல சரியான பாதை அமைக்க வேண்டும். இந்தப் பாதையில் குறுக்கிடும் இரண்டு ஓடைகளிலும் நிரந்தர பாலம் அமைக்க வேண்டும். மயானத்துக்குக் கூரை அமைக்க வேண்டும். இதனை போர்க்கால அடிப்படையில் செய்துதர முன்வர வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளனர். சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்தது கட்டாலங்குளம் கிராமம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மலைச்சாலை போக்குவரத்து பாதிப்பினால் பொருட்களை தலையில் சுமந்து செல்லும் பொதுமக்கள்!