திருச்செந்தூர் நகர் அம்பேத்கர் சிலை அமைப்பு மற்றும் பராமரிப்பு குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் முரசு தமிழப்பன் தலைமையில் பலர் வந்திருந்தனர். தொடர்ந்து அவர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம் தொடர்பாக முரசு தமிழப்பன் கூறுகையில், திருச்செந்தூர் தொகுதியில் சட்டமேதை அம்பேத்கர் சிலை அமைப்பதற்காக பலமுறை மனு அளித்துள்ளோம். இதனைத்தொடர்ந்து அம்பேத்கர் சிலை அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
ஆனால் சாதிய வகுப்புவாதத்தை காரணம்காட்டி தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை, காவல் துறையினர் சார்பில் சிலை அமைப்பதற்கு தடையில்லா சான்று இதுவரை வழங்கப்படவில்லை. அரசின் இந்த போக்கை கண்டித்து திருச்செந்தூரில் தொடர் போராட்டங்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடத்தி வந்தோம். ஆனால் எதற்கும் அரசு செவிமடுப்பதாக தெரியவில்லை.
திருச்செந்தூரில் அம்பேத்கர் சிலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம். அதை நிறைவேற்றும் வரை திருச்செந்தூர் தொகுதி பட்டியலின மக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்வதென முடிவு செய்துள்ளோம்.
இதற்கு முதல் கட்டமாக 550 பேரின் வாக்காளர் அடையாள அட்டைகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் திரும்ப ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம். இதற்கு அடுத்தபடியாக பத்தாயிரம் பட்டியலின மக்களின் வாக்காளர் அடையாள அட்டைகளையும் பெற்று மாவட்ட ஆட்சியரிடம் திரும்ப ஒப்படைப்போம் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருப்பூர் முதலாம் கூட்டுக் குடிநீர் திட்டம் ரத்து; பொதுமக்கள் சாலை மறியல்