தூத்துக்குடியைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் கடந்த 14.09.2022 அன்று இரவு சுமார் 9 மணியளவில் தன்னுடைய வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சுந்தரவேல்புரத்தைச் முருகன்(27), அழகேசபுரத்தை சேர்ந்த கோகுல்ராம்(19), என்பவரும் இரு சக்கர வாகனத்தில் சென்று அப்பெண்ணை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி தங்களது இரு சக்கர வாகனத்தில் கடத்திக் சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பின்னர் மறுநாள் காலை அப்பெண்ணை வீட்டருகே இறக்கி விட்டுச்சென்றுள்ளனர். அதன்பிறகு கோகுல்ராம் என்பவர் அந்த பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு உடலுறவுக்கு அழைத்துள்ளார். அதற்கு அப்பெண் வர மறுத்ததால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அப்பெண் நேற்று(செப்.15) தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இச்சம்பவங்களை அறிந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் தலைமையில், அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் தனிப்படை அமைத்து இருவரையும் தேடி வந்தனர். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த இருவரையும் காவல்துறையினர் கைது செய்து, விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் முருகன் மீது பல காவல்நிலையங்களில் 18 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இதனையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் பாலியல் குற்றம் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: 10 வயது மாணவிக்குப் பாலியல் தொல்லை தந்த தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது