சாத்தான்குளம் தந்தை-மகன் அடுத்தடுத்து மரணித்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் அண்மையில் வெளியாகின.
அதில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணனின் அழைப்பை ஏற்று, ஜூன் 19ஆம் தேதியன்று ஜெயராஜ் காவல் வாகனத்தில் ஏறுகிறார். அதன் பின்னர் ஜெயராஜின் மகன் பென்னிக்ஸ் காவல் நிலையம் செல்வது தெரியவந்துள்ளது.
இதனால் இவர்கள் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் (எஃப்.ஐ.ஆர்.), “தரையில் புரண்டு சண்டையிட்டனர்” என்று உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் கூறியிருப்பது பொய் என்பது இந்த சிசிடிவி காட்சிகள் மூலமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்நிலையில், தந்தை-மகன் இரட்டை மர்ம மரணம் தொடர்பாக மதுரை உயர் நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்திவருகிறது. இது தொடர்பாக விசாரிக்க கோவில்பட்டி நீதித்துறை நடுவர் (மாஜிஸ்திரேட்) பாரதிதாசன் சாத்தான்குளம் சென்றார். அப்போது அவரும் காவலர்களால் மிரட்டப்பட்டுள்ளார்.
மேலும், மாஜிஸ்திரேட் பாரதிதாசனிடம் உரிய ஆவணங்களை ஒப்படைக்க மறுத்து தூத்துக்குடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார் இறுக்கம் காட்டியதாகவும், சாத்தான்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரதாபன் எந்த கேள்விக்கும் பதிலளிக்காமல் மாஜிஸ்திரேட்டை வெகுநேரம் காக்க வைத்துள்ளதாகவும் தெரியவருகிறது.
இதற்கிடையில் மாஜிஸ்திரேட்டை பயமுறுத்துவதுபோல் சுற்றி சுற்றி வந்து, செல்போனில் படம் எடுத்த காவலர் மகாராஜன் என்பவர், “உன்னால ஒன்னும் புடுங்க முடியாது டா” என்று மிரட்டும்படி ஏக வசனத்தில் ஒருமையில் பேசியதுடன், சவாலும் விடுத்துள்ளார்.
இதனை மதுரை உயர் நீதிமன்ற கிளைக்கு மின்னஞ்சல் வாயிலாக புகாராக மாஜிஸ்திரேட் பாரதிதாசன் அளித்தார். இந்தப் புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதிகள், “தூத்துக்குடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார், சாத்தான்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரதாபன் மற்றும் காவலர் மகாராஜன் ஆகியோர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிய உத்தரவிடுவதாகவும் உடனடியாக மூவரையும் இடமாற்றம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றும் குறிப்பிட்டனர்.
இதையடுத்து தூத்துக்குடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார், சாத்தான்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரதாபன் ஆகியோர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். மேலும் காவலர் மகாராஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதற்கிடையில் வழக்கு விசாரணை விரைந்து நடைபெறும் வகையில், நீதித்துறை நடுவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் ஊரடங்கு விதிகளை மீறி, அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக செல்போன் கடையை திறந்துவைத்திருந்தனர் என்ற குற்றஞ்சாட்டின் அடிப்படையில் காவலர்களால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச ஊடகங்கள் இச்சம்பவத்தை அமெரிக்க ஆப்பிரிக்கர் ஜார்ஜ் ஃப்ளாய்ட் படுகொலை நிகழ்வுடன் ஒப்பிட்டு செய்திகள் வெளியிட்டன என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க: சாத்தான்குளம் சிசிடிவி காட்சி: முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டவை பொய்!